வெளிநாட்டு பல்கலைகளில், இந்திய மாணவர்கள் சேர
சி.பி.எஸ்.இ., சர்வதேச பாடத் திட்டத்தில் படித்திருப்பது அவசியம் என்பதால்,
இப்பாடத் திட்டம் குறித்து உறுப்பு கல்லூரிகளுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும் என பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ.,
பாடத்திட்டங்களில் படித்து முடிக்கும் மாணவர்கள், கல்லூரி படிப்பை
தொடரவும், முதுநிலை படிப்பிற்காகவும், அதிகளவில், வெளிநாடு செல்கின்றனர்.
அங்குள்ள பல்கலைகளின் பாடத் திட்டங்களில் குழப்பங்கள் ஏற்பட்டதால்,
"சி.பி.எஸ்.இ., இன்டர்நேஷனல்" என்ற புதிய பாடத் திட்டம், 2010ல், கொண்டு
வரப்பட்டது.
அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான்
உள்ளிட்ட நாடுகளில், இந்த பாடத்திட்டம் உள்ளது. நம் நாட்டில் முதற்கட்டமாக,
50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த கல்வித்திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டது. இக்கல்வித் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 முடித்த, முதல் தொகுதி
மாணவர்கள், இந்தாண்டு வெளிவருகின்றனர்.
இந்நிலையில், இம்மாணவர்களுக்கு உயர்கல்வி பயில
குழப்பங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக, நாடு முழுவதும் உள்ள பல்கலைகளுக்கு,
பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) துணை செயலர், ஷகீல் அகமது, அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலக பல்கலைகளில்,
நம் மாணவர்கள் சேர்வதற்கு, இப்பாடத் திட்டம், மிகவும் அவசியம். எனவே,
அனைத்து பல்கலைகளும், இப்பாடத்திட்டம் குறித்து, தங்கள் இணைப்பு
கல்லூரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பல்கலை அங்கீகார
கொள்கையில், இதை அங்கீகரிக்க, உரிய அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
யு.ஜி.சி., என்பது, பல்கலைக்கழக மானியக்குழு என
அழைக்கப்படுகிறது. மத்திய பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை
கட்டுப்படுத்தும், தேவையான நிதி மற்றும் ஆலோசனைகளை வழங்கும், மத்திய
அமைப்பு. இதன் தலைவராக, பேராசிரியர், வேதபிரகாஷ் உள்ளார்.
இப்பாடத்திட்டத்தில், கற்பிக்கும் முறை மற்றும்
மதிப்பிடுதல் வேறுபடும். மாணவர்கள் விருப்ப அடிப்படையில், பாடங்களை தேர்வு
செய்யும் முறையும், பள்ளி அமைந்திருக்கும் பகுதி சார்ந்த பாடங்கள்,
அறிவியல் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பாடத்திட்டம்
முழுமையாக, "இ-புத்தகம்" எனப்படும், இணையதளம் மூலம் படிக்கும் வசதி
கொண்டது.
மேலும், பாடத்திட்டத்தில் அயல்நாட்டு மொழிகளும்
இடம் பெற்றுள்ளன. இது, மாணவர்கள், அந்த நாட்டு பல்கலைகளில்
மேற்படிப்பிற்கு செல்லும் போது உதவியாக இருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...