இன்னும் மூன்று நாட்களில், 26ம் தேதி துவங்க உள்ள பத்தாம் வகுப்பு பொது
தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, தீவிரமாக செய்து
வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை
குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த, 3ல் துவங்கிய பிளஸ் 2 பொது தேர்வு, 25ம் தேதியுடன் முடிகிறது.
அதற்கு அடுத்த நாள், 26ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு
துவங்குகிறது. தேர்வு துவங்க, இன்னும் மூன்று நாட்களே இருப்பதால்,
இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை தீவிரமாக செய்து வருகிறது. மாநிலம்
முழுவதும், 3,100 மையங்களில் (பள்ளிகள்), 50 ஆயிரம் அறைகள், தேர்வுக்காக
ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மொழித்தாள் தேர்வுகளின்போது, ஒரு லட்சம்
ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், தேர்வுப்பணியில்
ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன்பின் நடக்கும் தேர்வுகளில், பணியாளர்
எண்ணிக்கை, 50 சதவீதமாக குறையும். மாணவ, மாணவியரை கண்காணிக்க, 5,000
உறுப்பினர்கள் அடங்கிய பறக்கும் படை குழுக்களை, தேர்வுத்துறை அமைத்துள்ளது.
இந்த குழுக்கள், எந்தெந்த மாவட்டங்களில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது
உள்ளிட்ட, அனைத்து விவரங்களும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு
தெரியப்படுத்தப்பட்டு உள்ளன. 10.26 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை
எழுதுகின்றனர்.
கடந்த ஆண்டு வரை, காலை, 10:15 மணிக்கு துவங்கிய தேர்வு, இந்த ஆண்டு, ஒரு
மணி நேரம் முன்னதாக, 9:15க்கு துவங்குகிறது. வெயில் காரணமாக, தமிழக அரசு,
இந்த மாற்றத்தை செய்ததாக, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது. அதன்படி,
மாணவர்கள், காலை, 9:15 மணிக்கு, தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும்.
கேள்வித்தாள் படித்துப் பார்த்தல் மற்றும் விடைத்தாள் விவரங்களை நிரப்ப,
முதல் 15 நிமிடம் வழங்கப்படும். விடை எழுதுவதற்கான நேரம், 9:30க்கு
துவங்கி, 12:00க்கு (இரண்டரை மணி நேரம்) முடியும்.
தேர்வு நேரம் மாற்றம்:
தேர்வு
நேர மாற்றத்திற்கு, ஆசிரியர்கள், ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு
தெரிவிக்கின்றனர். கிராமப்புறங்களில், போக்குவரத்து வசதி குறைவாக உள்ள
இடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், தேர்வு மையங்களுக்கு, உரிய நேரத்தில்
செல்வதில் பிரச்னைகள் ஏற்படும் என்பதையும், காலையில், மீண்டும் ஒரு முறை
பாடங்களை புரட்டிப் பார்க்கக் கூட நேரம் இருக்காது என்பதையும், ஆசிரியர்கள்
சுட்டிக்காட்டி, பழைய நேரத்தின்படி, தேர்வை நடத்த, அரசு முன்வர வேண்டும்
என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், நேரத்தை மாற்றியது, முதல்வர் அலுவலகம்
என்பதால், கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை.
தேர்வு நடக்கும் தேதிகள்
26.3.14 மொழி முதற்தாள்
27.3.14 மொழி இரண்டாம் தாள்
1.4.14 ஆங்கிலம் முதற்தாள்
2.4.14 ஆங்கிலம் இரண்டாம் தாள்
4.4.14 கணிதம்
7.4.14 அறிவியல்
9.4.14 சமூக அறிவியல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...