பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த, ஆங்கிலம் முதற்தாள்
தேர்வில், வெறும், 14 மாணவர்கள் மட்டுமே சிக்கினர். வழக்கத்திற்கு மாறாக,
முறைகேடு எண்ணிக்கை குறைந்திருப்பது, கல்வித் துறை அதிகாரிகளிடையே, வியப்பை
ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில், சராசரியாக,
300 முதல், 400 மாணவர், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு, பறக்கும் படை
குழுவினரிடம் சிக்குகின்றனர். முறைகேட்டில் ஈடுபடும் மாணவர், சம்பந்தபட்ட
தேர்வில் இருந்து நீக்கப்படுவது உடன், சில தேர்வுகளுக்கு தடையும்
விதிக்கப்படுகிறது. ஆனாலும், முறைகேட்டில் ஈடுபடும் மாணவர் எண்ணிக்கை
குறைவதில்லை. கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், 397 மாணவர்கள், தேர்வு
முறைகேட்டில் ஈடுபட்டனர். தமிழ் பாடத்தேர்வு தவிர்த்து, இதர பாட
தேர்வுகளில், முறைகேடு அதிகமாக இருக்கும். குறிப்பாக, ஆங்கில தேர்வுகளில்,
அதிகமாக இருக்கும். ஆங்கிலம் முதற்தாள், இரண்டாம் தாள் ஆகிய இரு
தேர்வுகளில் மட்டும், 100 மாணவர் வரை பிடிபடுவர். ஆனால், நேற்று நடந்த,
பிளஸ் 2 ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், வெறும், 14 மாணவர் மட்டுமே
பிடிபட்டனர். மதுரை, ராமநாதபுரம், கரூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய
மாவட்டங்களில், தலா, ஒரு மாணவர், புதுக்கோட்டை 2, அரியலூர் 3 மற்றும்
திருவண்ணாமலை மாவட்டத்தில், நான்கு மாணவர் என, 14 பேர் மட்டுமே
பிடிபட்டனர். இது, கல்வித் துறைக்கும், தேர்வுத் துறைக்கும், பெரிய வியப்பை
ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வரமுருகன்
கூறுகையில்,''தேர்வு அறைகளில், கண்காணிப்பு, முழுமையான அளவில் உள்ளது.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்டால், எதிர்காலம் பாழாகிவிடும் என்ற
விழிப்புணர்வும், மாணவர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக,
முறைகேட்டில் ஈடுபடும் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது,'' என்றார்.
தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: கடந்த ஆண்டு வரை,
'மெயின் ஷீட்' பக்கங்கள் குறைவாக இருந்தன. இதனால், மாணவர், கூடுதல்
விடைத்தாள், கேட்டுக்கொண்டே இருப்பர். இதனால், அறை கண்காணிப்பாளர்,
சம்பந்தபட்ட மாணவரிடம், கூடுதல் விடைத்தாள் கொடுத்து, பட்டியலில்,
மாணவரிடம் கையெழுத்து பெறுவர். இதனால், ஒரு மாணவரிடம், 2 நிமிடம் நிற்க
வேண்டியது இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இதர மாணவர், முறைகேட்டில்
ஈடுபடுவர். தற்போது, 38 பக்கங்கள் கொண்ட, 'மெயின் ஷீட்' தரப்பட்டு உள்ளது.
பெரும்பாலான மாணவர், இந்த பக்கங்களுக்கு உள்ளேயே, தேர்வை முடித்துவிடுவர்.
ஒருசிலர் மட்டும், கூடுதல் தாள் கேட்பர். இதனால், அறை கண்காணிப்பாளர்
கவனம் சிதறாமல், முழுமையாக மாணவர் மீது உள்ளது. முறைகேடு குறைய, இது
முக்கிய காரணம். இவ்வாறு, தேவராஜன் கூறினார்.
தேர்வுத்துறை இயக்குநர் அவர்கள் கூறியது 100% உண்மை.புதிய நடைமுறையில் விடைத்தாளில் பூர்த்தி செய்யவேண்டிய விவரங்களை சரிபார்க்கும் போதும் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தனர்.தற்போது அந்த வேலையும் இல்லை.அறைக்கண்காணிப்பாளர் மாணவர்கள் மீது முழுக்கவனத்தையும் செலுத்த புதிய நடைமுறை வழிவகுக்கிறது.இது பாராட்டவேண்டிய அம்சமாகும்.
ReplyDelete