மாநிலம் முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் இன்று
துவங்குகின்றன. "ஆள்மாறாட்டத்தில், ஈடுபடும் மாணவர்கள் தேர்வெழுத வாழ்நாள்
தடை விதிக்கப்படும்" என்று முதன்மை கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வுகள், இன்று முதல் 24ம் தேதி வரை
நடக்கவுள்ளது. தமிழகத்தில் 2,210 மையங்களில், எட்டு லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு
நடக்கிறது. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது.
கோவை மாவட்டத்தில், இத்தேர்வுக்காக, மொத்தம் 90 மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
முதன்மை கண்காணிப்பாளர்கள் 90, துறை அலுவலர்கள்
மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் உட்பட 2,300 ஆசிரியர்கள் தேர்வுப் பணியில்
ஈடுபடவுள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளது. 19 வழித்தட அலுவலர்கள், 20 மைய பொறுப்பாளர்கள், 10
வினாத்தாள் மையங்கள், இரண்டு விடைத்தாள் சேகரிப்பு மையம்
அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
இறுதி கட்டமாக, நேற்று அறை கண்காணிப்பாளர்கள்
வருகையை உறுதி செய்தல், வினாத்தாள் மையங்கள் மற்றும் தேர்வு மையங்களை ஆய்வு
செய்தல் போன்ற பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில்,
"தேர்வுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில்
மாணவர்களின் அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேர்வு அலுவலர்களோ,
மாணவர்களோ முறைகேடான செயல்களில் ஈடுபட்டால், கடுமையான தண்டனைகள்
வழங்கப்படும். ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வெழுத வாழ்நாள் தடை
விதிக்கப்படும்.
தேர்வுகளில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல்
இருக்க, 190 பேர் அடங்கிய குழு பறக்கும் படையாக நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்வுப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகள்
வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...