பிளஸ் 2 தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு
தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வரும்படி எஸ்எம்எஸ் மூலம் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2
தேர்வுகள் கடந்த 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த தேர்வில் 1
லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளர்களாகவும், பறக்கும் படையிலும்,
கேள்வித்தாள் காப்பு மைய பொறுப்பிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்நிலை,
நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களும் தேர்வுப் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆசிரியர்கள் அனைவரும் நாடாளுமன்றத்
தேர்தல் பணி செய்ய வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
தெரிவித்துள்ளார். அதன்படி ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்டங்களில்
தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆசிரியர்கள், அரசு
ஊழியர்களுக்கு 3 முறை தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் சென்னையில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் இன்று மாநகராட்சி
மண்டலம் 5ல் தேர்தல் வகுப்பு நடக்கிறது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று
நேற்று மதியம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்தல்
பொறுப்பு அதிகாரி தகவல் அனுப்பியுள்ளார். இன்று பிளஸ் 2 வகுப்புக்கான
உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் பாடங்களுக்கான தேர்வுகள்
நடக்கிறது. இந்த தேர்வுப் பணியில் உள்ள முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கும் தேர்தல் வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று எஸ்எம்எஸ்
வந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: காலை 10 மணிக்கு தேர்வுகள்
தொடங்கும். மதியம் 1.15க்கு முடியும். தேர்வுப் பணியில் உள்ளவர்கள் தேர்வு
மையங்களை கண்காணித்த பிறகு, விடைத்தாள்களை சேகரித்து கட்டாக கட்டி
திருத்தும் மையங்களுக்கு அனுப்புவது உள்ளிட்ட பணிகளை மதியம்தான் செய்ய
வேண்டும்.
இந்த பணிகள் முடிய மாலை 6 மணி ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதியம் தேர்தல் வகுப்புக்கு வர வேண்டும்
என்று அழைப்பு வந்துள்ளது. பிளஸ் 2 தேர்வுப் பணியில் ஆசிரியர்கள்
ஈடுபடுகின்றனர் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேர்தல் அதிகாரிக்கு
முன்கூட்டியே தெரிவித்தார்களா என்று சந்தேகமாக உள்ளது. இரு துறைகளுக்கும்
இடையே தகவல் தொடர்பு இல்லையா. இது தவிர பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள்கள்
திருத்தும் பணிகள் 21ம் தேதி தொடங்க உள்ளது. முதலில் தலைமை தேர்வு அதிகாரி,
சிறப்பு தேர்வு அதிகாரி ஆகியோர் விடைத்தாள் திருத்துகின்றனர். 24ம் தேதி
முதல் துணை தேர்வு அலுவலர்கள் விடைத்தாள் திருத்துகின்றனர். அதற்கு பிறகு
ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவார்கள். இந்த பணி ஏப்ரல் 30ம் தேதி வரை
தொடரும். ஆனால் ஏப்ரல் 24ம் தேதி நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தல் பணியில்
மேற்கண்ட ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து
வருகின்றனர். விடைத்தாள் திருத்துவதுடன் தேர்தல் பணியையும் எப்படி செய்ய
முடியும். தேர்வுப் பணிகள் இருப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர்
தேர்தல் அதிகாரிகளுக்கு ஏன் தெரிவிக்கவில்லை. எந்த பணியைத்தான் செய்வது
என்று புரியாமல் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். சில மாவட்டங்களில்
தேர்தல் வகுப்புகள், பயிற்சி வகுப்புகள் மாறி வர வாய்ப்பு இருந்தாலும்
தேர்தல் நேரத்தில் ஆசிரியர்கள் எப்படி பணியாற்ற முடியும் என்று
தெரியவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து முடிவு எடுக்க
வேண்டும். இவ்வாறு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...