மழலைப் பருவத்தில் கண்டு கொள்ளாமல் விடுவதே,
விடலைப் பருவத்தில் ஏற்படும் முக்கியப் பிரச்னைகளுக்கு காரணமாகிறது,
என்கின்றனர், மனநல டாக்டர்கள்.
விடலைப் பருவத்தில், தவறான நண்பர்களின்
சேர்க்கை, காதல் பிரச்னைகளால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 'அந்த
வயதில் அவர்களை மாற்றுவதைவிட, மழலைப் பருவத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி
வைக்க வேண்டும்' என்கின்றனர், மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத் தலைவர்
குமணன், டாக்டர் கீதாஞ்சலி. அவர்கள் கூறியதாவது: 13 முதல் 19 வயது
வரையுள்ள, விடலைப் பருவப் பிரச்னைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம்
தருகிறோம். பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கித் தருவது, முதல் மதிப்பெண்
பெற்றால், பொருள் வாங்கித் தருவேன் என்று சொல்வதும், மழலைப் பருவத்திலேயே
பொருளின், பணத்தின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தி விடும். படிப்பிலோ,
விளையாட்டிலோ ஜெயித்தால், மனதார பாராட்டலாம், தட்டிக் கொடுக்கலாம்,
அரவணைக்கலாம்.
பெற்றோரே காரணம்: 'நான் பட்ட கஷ்டம்... என்
பிள்ளை படக்கூடாது, சந்தோஷமான மனநிலையில் மட்டுமே பிள்ளை வளரவேண்டும்' என,
பெற்றோர் நினைப்பது தான், முதல் தவறு. இதுவே, தோல்வியை தாங்கிக்
கொள்ளும் மனப்பக்குவத்தை தகர்த்துவிடுகிறது. மழலைப் பருவத்தில் ராஜவாழ்க்கை
வாழவைத்து விட்டு, விடலைப் பருவத்தில் இறுக்கிப் பிடிக்கும் போது,
எதிர்கொள்ள முடியாமல் தவறான முடிவைத் தேடுகின்றனர். தவறே செய்தாலும், அதை
அடிக்கடி சொல்லி காட்டி அடித்தால், செய்த தவறு மறந்துபோய், பெற்றோர்
அடித்தது மட்டுமே நினைவிருக்கும். இது, மேலும் தவறுக்கு வழிவகுக்கும்.
பிள்ளைகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும், 'டிவி' பாதிக்கிறது என்ற உண்மையை,
பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டே முக்கியம்: வகுப்பறையில்,
வீட்டில் ஆசிரியர், பெற்றோர் சொல்லித் தருவதை கேட்க வேண்டிய கட்டாயம்.
விளையாட்டு தான், மாணவனை பக்குவப்படுத்தும். மற்றவர்களிடம் நடந்து கொள்ளும்
அணுகுமுறையை, யாரும் சொல்லித் தராமலேயே தானாக கற்றுக் கொள்வர். தெருவில்
இடமில்லா விட்டால், வீடுகளில் விளையாட அனுமதிக்க வேண்டும். சமூகத்தை
எதிர்கொள்ளும் துணிவு, தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவம் வரவேண்டுமெனில்,
பெற்றோர் தங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும், என்றனர்.
'டிவி' வேண்டாமே: தினமும் மூன்று மணிநேரம்
'டிவி' பார்க்கும் பிள்ளைகள், வாலிப பருவத்தில் சாதாரண, திறமையில்லாத
வேலைகளையே பார்க்கின்றனர். இரண்டு மணி நேரம் பார்ப்பவர்கள், அலுவலக வேலை
செய்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக பார்ப்பவர்கள் தான்,
ஜெயிக்கின்றனர். இது வெளிநாட்டு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...