பிளஸ் 2 தேர்வுக்கு தடையில்லாமல் மின்
வினியோகம் வழங்கியது போல், 10ம் வகுப்பு தேர்வுக்கும் வழங்கப்படுமா என்ற
சந்தேகம், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதிகளவில், மின்
பற்றாக்குறை இருந்ததால், பள்ளி பொதுத்தேர்வு என்று கூட பார்க்காமல், கடந்த
ஆண்டு வரை மின்தடை செய்யப்பட்டது. மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக
பல மையங்களில், ஜெனரேட்டர் உதவியுடன் மின் வினியோகம் செய்யப்பட்டது.
புதிய அனல்மின் நிலையங்களில் கூடுதல் மின்சாரம்
கிடைத்தாலும், நடப்பாண்டிலும், மின் பற்றாக்குறை இருந்ததால், தேர்வு
மையங்களில், மின்தடை செய்யப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. "தேர்வு
துவங்குவதற்கு முன், இரண்டு மணி நேரம் தேர்வுக்கு பின், இரண்டு மணி நேரம்
என, தேர்வு மையங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வினியோகிக்க வேண்டும்" என
அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதற்காக, தேர்வு நேரங்களில், நீர்மின்
நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டனர். இதனால், மின்
பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், குடியிருப்புகளுக்கு செல்லும், "பீடர்"களில்
மின் வினியோகம் நிறுத்தப்பட்டு, பள்ளிகளுக்கு செல்லும், "பீடர்"களில்
தடையில்லாமல் மின் வினியோகம் செய்தனர்.
எனவே, பிளஸ் 2 தேர்வு நடந்த எந்த மையத்திலும்,
மின்தடை பிரச்னை எழவில்லை. இந்த சூழ்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
துவங்கியுள்ளது. இந்த தேர்வை, 10.38 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பிளஸ்
2 தேர்வுக்கு, தடையில்லாமல் மின்சாரம் வழங்கியது போல், 10ம் வகுப்பு
தேர்வுக்கும் வழங்கப்படுமா அல்லது மின்தடை செய்யப்படுமா என்ற சந்தேகம்
மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது: கடந்த காலங்களில் தேர்வு மையங்களில், மின்தடை ஏற்பட்டது போல்,
இந்த ஆண்டு நடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்; இதற்காக, பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால், தேர்வு மையங்களில் மின்தடை பிரச்னை
என்று, எங்கிருந்தும் தகவல் வரவில்லை; இதை, பெரிய வெற்றியாக கருதுகிறோம்.
பிளஸ் 2 தேர்வு போலவே, 10ம் வகுப்பு தேர்வு
மையங்கள், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, தடையில்லாமல் மின்
வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...