பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல்
10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான
வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள்
துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள்களைத்
திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 70-க்கும் அதிகமான மையங்கள் அமைக்கப்பட
உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான
ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மொத்தம் 80 லட்சத்துக்கும் அதிகமான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்
அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26-ஆம்
தேதி தொடங்கின. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் பள்ளிகளின் மூலமாக 10
லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களும் தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும்
எழுதி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் பயிற்சி
காரணமாக ஏப்ரல் இறுதியில் விடைத்தாள் மதிப்பீடு நடக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டை முன்கூட்டியே
நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம்
வகுப்புத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்வில்
மொழிப்பாட விடைத்தாள்கள் இப்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.
முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல்
தொடங்கப்பட உள்ளன.
6 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள்:
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவையடுத்து இந்த
ஆண்டு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை, ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 3-ஆம் தேதி
தொடங்குகின்றன இந்த வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள்
நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் மாவட்ட
அளவில் அச்சிடப்பட்டு தயாராக உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர். இந்த ஆண்டு மொத்தமாக வினாத்தாள்களை எடுத்து வருவதற்குப்
பதிலாக ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வினாத்தாள் காப்பு மையங்களிலிருந்து
வினாத்தாள்கள் எடுத்துவரப்பட உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...