ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால், டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற 49-வது நாளில்
அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன், அமைச்சரவை
உறுப்பினர்களும் பதவி விலகினர்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, அரவிந்த்
கேஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு
அனுப்பியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆம் ஆத்மியின் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள்
மத்தியில் உரையாற்றிய அரவிந்த் கேஜ்ரிவால், மக்களிடம் கருத்து கேட்டு
காங்கிரஸ் ஆதரவுடன் செய்த ஆட்சியில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற
சட்டப்பேரவையில் இன்று ஆதரவு கிடைக்கவில்லை என்றும், முகேஷ் அம்பானி
மீதும், வீரப்ப மொய்லி மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டு
விட்டதே இதற்குக் காரணம் என்றும் பேசினார்.
மேலும், காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளை முகேஷ் அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள்தான் நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதவை
நிறைவேற்றுவதுதான் ஆம் ஆத்மியின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதி என்ற
அவர், இம்மசோதாவை நிறைவேற்ற முடியாமல் பாஜகவும் காங்கிரஸும் கூட்டாக
தடுத்துவிட்டதாக கூறினார்.
ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல்
போனது குறித்து டெல்லி சட்டப்பேரவையில் அதிருப்தி வெளியிட்ட அரவிந்த்
கேஜ்ரிவால், முகேஷ் அம்பானிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததன்
காரணமாகவே, இம்மசோதாவை அறிமுகப்படுத்த காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய
கட்சிகள் அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஊழலை ஒழிப்பதற்காக தனது முதல்வர் பதவியையும், தன் உயிரையும் தியாகம் செய்வதை அதிர்ஷ்டமாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, துணை நிலை ஆளுநரின் அறிவுரையை மீறி,
கடும் அமளிக்கு இடையே டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்ய முற்பட்டார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள்
இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து
அமளி நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், பேரவை மீண்டும் கூடியதும் இம்மசோதாவை
தாக்கல் செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மற்றும்
பாஜக உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர்.
அதைத் தொடர்ந்து, ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல்
செய்வதற்காக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக ஆம் ஆத்மியைச்
சேர்ந்த 27 பேர் மட்டுமே வாக்களித்தனர். மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக
காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து, 42 எம்.எல்.ஏ.க்கள்
எதிர்ப்பதால், ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்று
டெல்லி பேரவைத் தலைவர் எம்.எஸ். திர் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஜன் லோக்பால் மசோதாவை
தாக்கல் செய்ய முடியாததால், டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது என
அரவிந்த் கேஜ்ரிவால் முடிவு செய்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...