கருத்துச் சுதந்திரத்தை யாராலும் தடை செய்ய முடியாது என்று சென்னை நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு தெரிவித்தார்.
கணையாழி பத்திரிக்கை சார்பில் கணையாழி விருது வழங்கும் விழா மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோ டி க்ரூஸ்-க்கு பாராட்டு விழா ஆகியவை சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறுகதைக்கான ஜெயகாந்தன் விருது எஸ்.டி.ஏ. ஜோதி, கவிதைக்கான ஆண்டாள் விருது மலர்மகள், கட்டுரைக்கான கா. சிவத்தம்பி விருது பழ அதியமான் ஆகியோருக்கு நீதிபதி கே. சந்துரு வழங்கினார். கணையாழி விருதுகள் இரண்டாவது ஆண்டாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அவர் பேசியது: கொற்கை நாவலுக்கு சாகித்ய அகாதெமி வழங்கியபோதே, அதில் தவறான கருத்துகள் உள்ளன என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
படைப்பு என்பது எழுத்தாளரின் முடிவு. அதனை எதிர்க்கக்கூடாது. படைப்புகளை எதிர்ப்பது பொறுமையற்றதன்மையையே காட்டுகிறது.
இப்போது வெளியிடப்பட்ட புத்தகங்கள் பல எதிர்ப்புகளால் வாபஸ் பெறப்படுகின்றன. ஆனால் அதே புத்தகத்தை, சமூக வலைத்தளங்களில் அனைவரும் படிக்கின்றனர். கருத்து சுதந்திரத்தை யாரும் தடை செய்ய முடியாது.
அரசுகள் காவல்துறை மூலம் மிரட்டியும், சட்டத்தின் மூலமாகவும் புத்தகங்களுக்கு தடை செய்தாலும், இணையதளம் மூலம் அனைவரும் படிப்பார்கள். படைப்பாற்றலை யாராலும் தடுக்க முடியாது.
கொற்கை நாவலில் மீனவர் சமூகம் பற்றி அதே சமூகத்தை சேர்ந்தவர் எழுதியுள்ளதால், தத்ரூபமாக உள்ளது. அதனால்தான் விருது கிடைத்துள்ளது.
ஜாதி, சமூகம் கடந்து போராடும் தலைவர்களை குறிப்பிட்ட ஜாதி தலைவர்களாக அதே ஜாதியை சேர்ந்தவர்களே குறுக்கிவிடுகிறார்கள், என்றார் கே. சந்துரு.
நல்லி குப்புசாமி: விருது பெற்றவர்களை வாழ்த்திய தொழிலதிபர் நல்லி குப்புசாமி பேசும்போது, சிறு பத்ரிக்கைகளை நடத்துவது இன்றைய சூழலில் மிகவும் கடினம். இசை குறித்த சிறு பத்ரிக்கையை நடத்த முயன்றபோது, அதனை தொடர்ந்து வெளிக்கொணர முடியவில்லை.
ஆனால் கணையாழி பல ஆண்டுகளாக இலக்கிய இதழாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது என்றார்.
இந்த விழாவில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், எஸ்.கே.பி. கல்வி நிறுவனங்களின் தலைவர் கு. கருணாநிதி, எழுத்தாளர்கள் கலாப்பிரியா, எஸ். ராமகிருஷ்ணன், கணையாழி ஆசிரியர் ம. ராசேந்திரன், தசரா தமன் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...