நாட்டின் 15வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் மே மாதம் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து 16-வது நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த விரிவான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் அதிகாரிகள் உட்பட அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு தேவைப்படும் மனித வளம் குறித்த விவரங்கள் சேகரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவோர், ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருவோர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த பணிகள் அனைத்தும் கடந்த 15ம் தேதியுடன் முடித்து தேர்தல் ஆணையத்துக்கு பட்டியல் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி, போலீஸ் நிர்வாகத்தில் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் மூலம் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அடுத்த 6 மாதங்களில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுத்த வேண்டாம். அதேபோல், சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தாலும் இடமாறுதல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வருவாய்த்துறையில் தாசில்தார்கள் பலர் அடுத்த 6 மாதத்தில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். தற்போது தேர்தல் ஆணைய உத்தரவால் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. அதேபோல் ஆசிரியர்கள் பலருக்கும் விலக்கு அளிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கட்டுப்பாட்டு பிரிவுகள் தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஒரு தாசில்தார், ஒரு துணை தாசில்தார் உள்பட 7 பேரை நியமிக்கவும் கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் இந்த பிரிவு நாளைக்குள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...