ஓராண்டு கால பட்டம் பெற்றவர்களுக்கு பதவி
உயர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு அங்கீகாரம் வழங்கக்
கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. ஒரு படிப்பில் மூன்றாண்டு பட்டம் பெற்று, வேறாரு படிப்பில் ஓராண்டு பட்டமும் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பிரச்னை எழுந்தது. இதை எதிர்த்து ஓராண்டு பட்டம் பெற்றவர்களும் மூன்றாண்டு கால பட்டம் பெற்றவர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, ஓராண்டு கால பட்டம் பெற்றவர்களை இடைநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கவும், ஆசிரியராக நியமனம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது எனவும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை
எதிர்த்து 214 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை
தாக்கல் செய்தனர். மேலும், ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித்
தேர்வு எழுத அனுமதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி
ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு
முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த
உத்தரவு: பல்கலைக்கழக விதிகளில் பட்டப் படிப்புக்கு என பல்வேறு விதிகள்
தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த விதிகளில், ஓராண்டு பட்டப்படிப்புகள் இடம்
பெறவில்லை.
மேலும், அரசு பள்ளிகளில் சாதாரண
மாணவர்கள்தான் படிக்கின்றனர். அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்.
இந்த ஓராண்டு பட்டதாரிகளால் அந்த மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க முடியுமா
என்பது சந்தேகம்தான்.
அதனால், ஓராண்டு கல்வியில் பட்டம்
படித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவும்
அங்கீகாரம் வழங்கக் கூடாது என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரிதான்.
மேலும், ஓராண்டில் பட்டம் பெற்றவர்கள்
மூன்றாண்டு படித்து பட்டம் பெற்றவர்களுக்கு சமமாக மாட்டார்கள். ஓராண்டு
பட்டம் படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதி இல்லை என அவர்களை
நிராகரித்த அதிகாரிகளின் செயலும் சரிதான்.
எனவே, மேல் முறையீடு செய்த இந்த
மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஓராண்டு பட்டம் படித்தவர்களை பதவி
உயர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அங்கீகரிக்க கூடாது என்ற தனி
நீதிபதி பிறப்பித்த உத்தரவும் உறுதி செய்யப்படுகிறது என உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...