"அக்னி பரீட்சை" என்றால் அலறாதவர்கள் கூட
"பொதுத்தேர்வு" என்றால் அலறிக் கொண்டு ஓடும் காலகட்டம் இது. அத்தகைய "மகா
கணம்" பொருந்திய அரசுப் பொதுத்தேர்வு, பன்னிரெண்டாம் வகுப்பு
மாணவர்களுக்குத் துவங்க, இன்னும் சிறிது நாட்களே உள்ளன. கண்மூடி கண்
திறப்பதற்குள், நாட்கள் உருண்டோடி பரீட்சையும் வந்துவிடும்.
பெற்றோர் B.P ஏற, மாணவர்கள் கிறுகிறுக்க,
ஆசிரியர்கள் அங்குமிங்கும் அலையும் இந்த நாட்களில், ஒவ்வொரு காலையும்
உங்களைப் பலப்படுத்தி, சீறிப்பாயும் காளையை சிறப்பாக மடக்கும் யுக்திகளைக்
கற்றுக்கொடுத்து, இருக்கும் சில நாட்களில் சிகரத்தை தொட முனையும்
மாணவர்களுக்கு ஊன்றுகோலாக Count Down - Exam Day. ஒவ்வொரு நாள் காலையும்
இதைப் படித்துவிட்டு, மறுவேலைப் பாருங்கள் மாணவர்களே!
இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்
பரீட்சையை நினைத்தால், பலவிதமான "பீலிங்ஸ்" உங்களுக்கு இருக்க
வாய்ப்புண்டு. "படிப்ஸ்" என்று உங்கள் தோழர்களால் நீங்கள்
வர்ணிக்கப்படுபவராக இருந்தால், பரீட்சை என்றதும் ஒரு உற்சாகம் கலந்த
பரபரப்பு. அடுத்தவரைப் பார்த்து "படிப்ஸ்" என்று வர்ணிக்கும் நபராக நீங்கள்
இருந்தால், படபடப்பு கலந்த "அப்பவே படிச்சி இருக்கலாம்" என்ற எண்ண
ஓட்டங்கள்.
சிலருக்கு "பார்த்துக்கலாம் டா" என்ற
காலதாமதம் கலந்த படிக்கும் முயற்சிகள், சில பேருக்கு இன்னும் எட்டிப்
பார்க்கும் தெனாவெட்டு, சில பேருக்கோ, பயத்தில் ஜுரமே அடிக்கத் துவங்கி
விட்டது. "படிச்சா மாதிரி இருக்கு ஆனா படிக்காத மாதிரியே இருக்கு" என
வடிவேல் குழப்பங்கள் சிலருக்கு. ஆனால், இத்தனை பரபரப்புகள் சுற்றிலும்
இருந்தாலும், சிலருக்கோ, "என் girl friend பச்சைக் கலர் உடையில் வந்து
இன்னும் அவளுடைய சம்மதத்தை சொல்லவில்லையே" என்ற எண்ணம் மட்டும் பெரிதாக
உட்கார்ந்து கொண்டு, பரீட்டை முயற்சிகளை சிதறடித்துக் கொண்டு இருக்கின்றது.
இவற்றில் நீங்கள் எந்த நிலையில்
இருந்தாலும், இந்த மனோநிலைதான் உங்கள் துவக்கம். பரீட்சைக்காக நீங்கள்
தயாராவது இங்கிருந்துதான் துவங்க வேண்டும். இதை சரிசெய்து கொள்ளாமல்,
உங்களது சிறப்பான ஆற்றலை பரீட்சையில் வெளிப்படுத்துவது கடினம். உங்கள் மனதே
உங்கள் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரதானம்.
உதாரணமாக, நீங்கள் மெரினா அலைகளில் கால்
நனைக்க செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்போதுதான் கால்வைத்து
விட்டு திரும்பிய நபர், நேராக உங்கள் முகத்தைப் பார்த்து, பலிச் என்று
துப்பிவிட்டுப் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு எப்படி
இருக்கும்? கண்மண் தெரியாமல் கோபம் வராது? நீங்கள் அப்போது என்ன
செய்வீர்கள்?
நேரே அவர் பின்னே சென்று, அவரது
சட்டையைப் பிடித்து இழுத்து, அவரை அறைய முயல்கிறீர்கள் என்று வைத்துக்
கொள்வோம். அப்போது அவர் தடுமாறிக் கொண்டே, "சார் என்ன ஆச்சு? ஏன் சார்
அடிக்க வரீங்க" என்று கேட்கிறார். நீங்களும் படபடப்பாக "என்ன ஆச்சா?
முகத்தில் காரித் துப்பிவிட்டு, இதுவேற கேள்வியா?" என்கிறீர்கள். அவரோ
குரல் தழுதழுக்க "மன்னித்து விடுங்கள் சார், நான் பிறவிக் குருடு. நீங்கள்
எதிரே இருந்தீர்கள் என்று தெரியாமல் துப்பி விட்டேன்" என்கிறார். இப்போது
நீங்கள் அவரை அடிக்கப் போவீர்களா? இல்லையே! உங்கள் செயல் மாறியதற்கான
காரணம், உங்கள் மனம் மாறியது மட்டுமே.
அதேபோல், நீங்கள் தேர்வு நெருங்கியும், நேரத்தை விரயம் செய்துகொண்டிருந்தால், உங்கள் மனதில் ஏதோ அபிப்ராயம் படிந்திருக்கின்றது.
"ஐயோ இவ்ளோ நாள் படிக்கலையே, இனிமேல படித்துவிட முடியுமா"...
தேர்வை நினைத்தால் பயம் உள்ளோர்க்கும்
மனதில் ஒரு அபிப்ராயம். அது ஏதோ சிங்கம், புலி போன்று ஒரு கற்பனை. ஓவர்
கான்பிடன்ஸ் உதார் விடுபவனும் இந்த ரகமே. இன்னும் சில நாட்களே உள்ள
நிலையில், நீங்கள் இன்றே ஆயத்தமாக துவங்க வேண்டியது உங்களது
மனநிலையில்தான்.
ஆழமாக சில மூச்சுக்களை எடுத்து வெளியே
விடுங்கள். இதுவரை உங்களுடைய மாணவ வாழ்க்கையான கடந்த காலத்தை அழித்த
விடுங்கள். இதோ இன்றுதான் பிறந்தேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்த 22
நாட்கள் சீராக திட்டமிட்டு படிக்க வேண்டும் என்று ஒரு எண்ணத்தை மனதில்
பதிய வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பியுங்கள்.
"ஹா என்னை ஜெயிக்க யார் இருக்கிறார்கள்"
என்ற மனோநிலை வேண்டாம். அதேசமயம் "அடப்போடா, எனக்கு படிப்பு இவ்வளவுதான்
ஏறும்" என்ற மனோநிலையும் வேண்டாம். ஓட்டப் பந்தயத்தின் கடைசி விளிம்பு இது.
இவ்வளவு தூரம் நன்றாக ஓடியும் கடைசியில் கோட்டை விடக்கூடாது. இவ்வளவு
நேரம் கடைசியில் இருந்தாலும், இந்த 22 நாட்களில் முன்னுக்கு வர முடியும்.
ஆகவே, இந்த நாட்களை நான் மிகச் சரியாக பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் எனது
ஆற்றலை வெளிப்படுத்துவேன் என்ற மனநிலையில் இருங்கள்.
தேர்வுக்கு தயாராவதென்பது, கொடுத்தப்
பாடங்களை கண்மூடித்தனமாக படிப்பது மட்டுமே இல்லை. மூளை, மனம், உடல்,
படிப்பு மற்றும் கவனம் இந்த ஐந்து அங்கங்களும் தன்னுடைய உச்சகட்ட நிலையில்
சேர்ந்து செயல்பட வைப்பதே மகத்தான வெற்றிக்கு வழிகோலும். இவற்றை
தயார்செய்து கொள்ள, தினந்தோறும் இந்தப் பக்கங்களை தவறாமல் படியுங்கள்.
- கீர்த்தன்யா, மைன்ட்பிரஷ்
superb........
ReplyDelete