அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப் பிரிவுகள்,
பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருப்பதால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், இந்த
பாடப் பிரிவுகள் காணாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.
கிராமப்புற ஏழை, எளிய
மாணவர்கள், பிளஸ் 2 படிப்பிற்கு பின், சுயதொழில் செய்ய வழிவகை செய்யும்,
இந்த பாடப்பிரிவுகளுக்கு, உரிய முக்கியத்துவம் அளிக்க, தமிழக அரசு,
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இறுதியில் தொழிற்படிப்பு : மேல்நிலைப்
பள்ளிகளில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, கம்ப்யூட்டர்
சயின்ஸ் போன்ற பாடங்கள் அடங்கிய, "குரூப்'களுக்குப் பின், இறுதியாக,
தொழிற்கல்வி பிரிவுகள் உள்ளன. பத்தாம் வகுப்பில், மதிப்பெ ண் குறைவாக
பெறும் மாணவர் மற்றும் பொறியியல், மருத்துவம் போன்ற உயர் படிப்புகளில் சேர
வசதி இல்லாமல், பிளஸ் 2 படிப்பிற்குப் பின், சுயதொழில் செய்ய விரும்பும்
மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பிரிவு வாய்ப்பாக உள்ளது.
வேளாண்மை, மோட்டார் ரீவைண்டிங், தட்டச்சு,
கணக்குப்பதிவியல் உள்ளிட்ட, 66 பாடப்பிரிவுகள், முதலில் இருந்தன.
காலப்போக்கில், மாணவர்களிடம் வரவேற்பு இல்லாத பல பாடப்பிரிவுகள்
நீக்கப்பட்டு, தற்போது, 12 பாட பிரிவுகள் மட்டும் உள்ளன. இவற்றில்,
விவசாயம் தட்டச்சு, மோட்டார் ரீவைண்டிங், ஆட்டோ டெக்னாலஜி, பொது
இயந்திரவியல் (மோட்டார் தயாரித்தல், காயில் கட்டும் தொழில்) உள்ளிட்ட
பாடப்பிரிவுகள் குறிப்பிடத்தக்கவை . இவற்றில், கம்ப்யூட்டர் ஆசிரியர்
மற்றும் விவசாய ஆசிரியர் மட்டும், மிக குறைந்த எண்ணிக்கையில், பணி நியமனம்
செய்யப்படுகின்றனர். இதர பாட பிரிவுகளுக்கு, ஆசிரியர் நியமனம் கிடையாது. பல
பாடப் பிரிவுகளில், மாணவர் சேர முன்வந்தாலும், ஆசிரியர் இல்லாததன்
காரணமாக, மாணவர் படிக்க முடியாத நிலை ஏற்படுவதாக, ஆசிரியர் சங்க
நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி
தொழிற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர், நல்லப்பன் கூறியதாவது: கர்நாடகா, கேரளா
உள்ளிட்ட மாநிலங்களில், பொதுக் கல்வி பாடப் பிரிவுகளுக்கு நிகராக,
தொழிற்கல்வி பாடப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தமிழகத்தில், தொழிற்கல்வி பிரிவை, ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை. கடந்த,
2007க்குப்பின், இந்த பாடப் பிரிவுகள், கட்டாயம் இல்லை என்பது போல்,
ஆசிரியர் நியமனத்தை, சுத்தமாக நிறுத்தி விட்டனர். ஓய்வு பெற்ற, 400
ஆசிரியர் பணிஇடங்களையும் நிரப்பவில்லை. இதனால், மாணவர் சேர்க்கையும்
குறைந்து வருகிறது.
முக்கியத்துவம் கிடைக்குமா? : இந்த நிலை
நீடித்தால், வரும் ஆண்டுகளில், தொழிற்கல்வி பாடப் பிரிவே முற்றிலும் இல்லாத
நிலை உருவாகும். கிராமப்புற, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்,
தொழிற்கல்வி பாடப் பிரிவை, பெரிதும் நம்பி இருக்கின்றனர். இந்த பாடப்
பிரிவுகளுக்கு, முக்கியத்துவம் அளிக்க, தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு, நல்லப்பன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...