ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண்
சலுகை வழங்கப்பட்டுள்ளதால், 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக
எடுத்தவர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஓர்
அரசாணை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90
மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் தேர்ச்சி பெறலாம். இந்த நிலையில்,
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்
மரபினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம்
சலுகை வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில்
இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண் (55 சதவீதம்) எடுத்தாலே தேர்ச்சி
பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு, பிளஸ் 2,
பட்டப்படிப்பு, பி.எட். ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல்,
ஆசிரியர் தகுதித் தேர்வு, பிளஸ் 2, பட்டயப்படிப்பு ஆகியவற்றின் எடுத்த
மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்
வழங்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை பொருத்தவரை இதுவரை 90
மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே
வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது. இப்போது தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை
வழங்கப்பட்டுள்ளதால் 82 முதல் 89 மதிப்பெண் வரை எடுத்தவர்களுக்கு 36
மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பட்டதாரி மற்றும் இடைநிலை
ஆசிரியர் நியமனம் இருக்கும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா
வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...