முறைகேடுகளை தடுக்கும் வகையில் எஸ்எஸ்எல்சி,
பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகளை
தேர்வுத்துறை இயக்குநரகமே நேரடியாக மேற்கொள்ளும் நடைமுறை அமலுக்கு
வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 3ம்
தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை போன்று எஸ்எஸ்எல்சி
பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரை
நடைபெற உள்ளது. இந்தநிலையில், தேர்வுக்கான பணியாளர்களை நியமனம் செய்யும்
நடைமுறைகளையும் மாற்றி அமைத்து தேர்வுத்துறை இயக்குநரகம்
உத்தரவிட்டுள்ளது.
இதுவரை ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலரே எந்தந்த பள்ளிகளுக்கு எந்தெந்த ஆசிரியர், தலைமை
ஆசிரியர், அறை கண்காணிப்பாளராக பணியாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வார்.
ஒரு சில மாவட்டங்களில் குறிப்பிட்ட சில ஆசிரியர்களை குறிப்பிட்ட சில
பள்ளிகளுக்கு தேர்வு பணிகளில் நியமனம் செய்வதாகவும், இதனால் தேர்வுகளில்
முறைகேடுகள் நடைபெற அவர்கள் உதவுவதாகவும் தேர்வுத்துறைக்கு புகார்கள்
சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் சில தனியார் பள்ளிகளின் தலையீடு
அதிக அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் தேர்வுக்கு பணியாளர்கள் நியமனத்தை
தேர்வுத்துறை இயக்குநரகமே நேரடியாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. முதன்மை
கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர்,
பறக்கும்படை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட வேண்டியவர்களின்
பெயர் மற்றும் விபர பட்டியலை தேர்வுக்கு சிடி வடிவில் ஒவ்வொரு
மாவட்டத்திலும் கேட்டு பெற்றுள்ளது. மேலும் தேர்வு மையங்கள் எண்ணிக்கை,
ஒவ்வொரு மையத்திலும் தேர்வு எழுதுகின்ற மாணவ மாணவியர் எண்ணிக்கையும்
தேர்வுத்துறையிடம் உள்ளது. அதன் அடிப்படையில் தேர்வு மையங்களுக்கு
ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்வுக்கு ஒரு சில
தினங்களுக்கு முன்னர் வரை இந்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.
இதனை போன்றே விடைத்தாள் திருத்தும் பணிகளிலும்
மாற்றம் செய்யப்பட உள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் முதன்மை
தேர்வர்கள், துணை தேர்வர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் போன்ற
அலுவலர்களையும் தேர்வுத்துறை இயக்குநரகமே நேரடியாக முடிவு செய்யும்.
முன்கூட்டியே இதற்காக ஆசிரியர்கள் விபரங்களை கேட்டுப்பெற்று நியமன பணிகளை
மேற்கொள்ள தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவித்தன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...