கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப் பள்ளிகளில்,
காய்கறி தோட்டம் அமைத்து, விளை பொருட்களை சத்துணவு திட்டத்துக்கு
பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக துவங்க
ஆயத்த பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும்
மாநகராட்சி பள்ளிகளில் விவசாய வகுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. பள்ளி
வளாகத்தில், காய்கறி தோட்டம் அமைத்து, சத்துணவு தயாரிக்க
பயன்படுத்தப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலுள்ள
மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு வாரத்தில் ஒரு நாள் விவசாய
வகுப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
அந்த நேரத்தில், மாணவர்களால் காய்கறி தோட்டம்
பராமரிப்பு, தண்ணீர் ஊற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, ஒவ்வொரு
பள்ளியிலும் விவசாய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த 15
ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் விவசாய வகுப்பு நேரம் ஒதுக்குவது
கைவிடப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் பாட ஆசிரியர்கள், விவசாய
ஆசிரியர்களாக கூடுதல் பொறுப்பு வகித்தனர். அரசு ஆர்வமில்லாததாலும்,
ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததாலும், அந்த திட்டம் கைவிடப்பட்டது.
விவசாய படிப்பு படித்த ஏராளமான இளைஞர்கள், அரசு
பள்ளிகளில் மீண்டும் விவசாய வகுப்பு துவங்க வேண்டுமென கோரிக்கை வைத்து
வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல்
மன்றங்கள் வாயிலாக, அரசு பள்ளிகளில், காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம்
மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள பள்ளிகளில் காய்கறி தோட்டம்
அமைக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இந்த திட்டம்
பரவலாக்கப்பட்டு, அனைத்து மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்
அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியிலுள்ள 16 மேல்நிலைப்
பள்ளிகளிலும், காய்கறி தோட்டம் துவங்க, மாநகராட்சி கவுன்சில் அனுமதி
வழங்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், சத்துணவுக்கூடம் அல்லது விளையாட்டு
மைதானம் அருகில், இடம் தேர்வு செய்யப்பட்டு, காய்கறி தோட்டம் அமைக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
தேசிய பசுமைப்படை திட்டம் மூலம் மாணவர்களிடையே
சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலை
மாசுபடாமல் பாதுகாத்தல், காய்கறி தோட்டம் அமைத்தல், மண்புழு பராமரித்தல்,
மழைநீர் சேகரித்தல் போன்ற பயற்சிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து, திறந்தவெளி காய்கறி
தோட்டம், மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. விளைவிக்கப்படும் காய்கறி
வகைகள் அந்தந்த பள்ளி சத்துணவு மையங்களுக்கு வழங்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை மாநகராட்சி பொதுநிதியில் செலவிட
முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...