மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும்
பள்ளி மாணவர்களின் சாதனைகள் குறித்த செய்தி மடலை மாதம் இரு முறை வெளியிட
மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சியில் உள்ள 92 நடுநிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 4 மாநகராட்சி பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல்
மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் மற்ற மாநகராட்சி பள்ளி
மாணவர்கள் பெற்ற பயன்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த நிகழ்வில்
மாநகராட்சி கல்வி அதிகாரி ரவிச்சந்திரன், "எவரெஸ்ட் எடுசிஸ் சொல்யூஷன்'
நிறுவனத்தின் துணைத்தலைவர் உமா மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்
தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடுகளுக்கென பிரத்யேக செய்தி
மடல் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
மாநகராட்சி பள்ளிகளின் நடவடிக்கைகள், சாதனைகள், புதிய முயற்சிகள் ஆகியவை
செய்தி மடலில் இடம்பெற்றிருக்கும். மாதம் இரு முறை 4 பக்கங்களாக செய்தி
மடல் வெளியிடப்பட உள்ளது.
இது மாநகராட்சி பள்ளியில் பயிலும் அனைத்து
மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் விநியோகிக்கப்படும். சுமார் 1
லட்சம் பிரதிகள் அச்சடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கலுக்குப் பிறகு
செய்தி மடலைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சிங்கப்பூர் பயணம்
"தேசிய அறிவியல் தினம்' பிப்ரவரி 28-ஆம் தேதி
அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு
இடையேயான அறிவியல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெறும்
மாணவர்களுக்கு முதல் பரிசாக சிங்கப்பூர் இலவச பயணம், இரண்டாம் பரிசாக
இந்தியாவில் உள்ள ஏதேனும் அறிவியல் மையத்துக்கு இலவச பயணம், மூன்றாம்
பரிசாக லேப்டாப் அல்லது ஐ-பேட் வழங்கப்பட உள்ளது. விரைவில் இந்த
போட்டிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
6 பள்ளிகளில் அறிவியல் மையங்கள்
திருவொற்றியூர், கும்மாளம்மன் கோயில்,
வியாசர்பாடி, மடுமாநகர், ஏ.பி.சாலை, பிரகாசம் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள
மாநகராட்சி பள்ளிகளில் இந்த கல்வியாண்டுக்குள் அறிவியல் மையங்கள்
அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...