உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு
இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்குவது தேர்தல் ஆணையம். 1950 ஜனவரி 25ம்தேதி துவங்கப்பட்ட தேர்தல்
ஆணையத்தின் வைர விழா கடந்த 2011ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
அதன்
பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம்தேதி, தேர்தல் ஆணையத்தை கவுரவிக்கும் வகையில்
தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. கண்ணியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற வாக்குப்பதிவு, வாக்களிப்பது
நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு என்று தேர்தல் ஆணையம், அரசு சாரா அமைப்புகளோடு இணைந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
தேர்தல் குறித்து மக்களிடம் நல்ல
விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு
அங்கமாகவே ஜனவரி 25ம்தேதியை தேசிய வாக்காளர் தினமாக
அறிவித்து உள்ளது. வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தி,
வாக்களிப்பதை அதிகப்படுத்துவதே இதன் நோக்கம்.
தேர்தல் ஆணையம் நவீன வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைனில் பெயர் சேர்ப்பு, நீக்கம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை,
வாக்குப்பதிவை ஆன்லைனில் கண்காணிப்பது, விரைவான தேர்தல் முடிவுகள் என புதுமைகளை புகுத்தி வருகிறது.
வாக்களிப்பது ஏன்?
இந்தியாவில் ஊராட்சி மன்ற தலைவர் முதல்
பிரதமர் வரை நேரடி அல்லது மறைமுக தேர்தலின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
வாக்களிப்பது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியரின்
கடமை. இதை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். வாக்குப்பதிவு 100 சதவீதத்தை தொடும்போதுதான், மக்கள்
விரும்பும் உண்மையான மாற்றம் ஏற்படும். வாக்களிப்பது எவ்வளவு அவசியமோ, அதேபோல 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்ப்பதும் அவசியம். எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் நமது
கடமையை செய்ய வேண்டும். தேர்தல் நடப்பது 5 ஆண்டுகளுக்கு
ஒருமுறை மட்டும் தான். அத்தினத்தில் அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு,
வாக்குரிமையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
அப்போதுதான் ஜனநாயகத்தை உறுதியாக நிலைநாட்ட முடியும்.
பணம் வாங்கலாமா?
நாட்டில் தற்போது பணத்தை கொடுத்து வாக்குகளை சேகரிக்கும் புதிய வழியை அரசியல் கட்சிகள் புகுத்தியுள்ளன. தேர்தல் என்பது ஒரு அப்பட்டமான முதலீடாக மாறி விட்டது. முன்பெல்லாம் அடிதடி, கள்ள ஓட்டு போடுவது என்பதுதான் பிரதானமாக இருந்தது. இது மாறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுதான் இப்போது பிரதானமாக இருக்கிறது. இவர்களின் மாய வலையில் சிக்கி விட்டால், நாம் விரும்பும் ஆட்சியாளர்களை கொண்டு வர முடியாமல் போய் விடும். பணத்திற்காக விலை மதிப்பற்ற வாக்குகளை விற்கக் கூடாது. இது நாட்டை விற்பதற்கு சமம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனவே, அனைவரும் ஜனநாயக கடமையை செம்மையாக நிறைவேற்றுவோம்.
Jai hind
ReplyDeleteVery nice. I will explain this to my students.. Thanks paadasaalai
ReplyDelete