அண்டை மாநிலங்களான கேரளா,
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்ததால் அதன்காரணமாக காவிரி
மற்றும் பவானி ஆறுகளில் உபரிநீர் வெளியேறி தமிழகத்தின் முக்கிய அணைகளான
மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. மற்றபடி
தமிழக அளவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும்
35 சதவீதம் குறைவாக பெய்ததால் நீராதாரங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து
விட்டது.
ஏற்கனவே 2012ம் ஆண்டு கடும் வறட்சியால் டெல்டா
மற்றும் இதர பாசனப்பகுதிகளில் பாசனம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்த
நிலையில் 2013ம் ஆண்டிலும் பரவலான மழைப்பொழிவு இல்லாததால் நிலத்தடி
நீர்மட்டம் வெகுவாக பாதிப்படைந்தது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில்
கீழ்பவானி பாசனப்பகுதிகளில் வழக்கமாக 800 முதல் ஆயிரம் அடி ஆழத்தில்
ஆழ்குழாய் தோண்டினால் கிடைக்க கூடிய நிலத்தடி நீர்மட்டம் தற்போது 1300 அடி
ஆழம் வரை தோண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதுமே இந்த
நிலை நீடிப்பது தற்போது நீரியல் நிபுணர்களின் ஆய்வின் மூலம் தெரிய
வந்துள்ளது. தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் மட்டுமே நிலத்தடி
நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மற்ற 24 மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம்
பெரிதும் சரிவடைந்திருப்பது சர்வே மூலம் தெரிய வருகிறது.
கடந்த 2013 டிசம்பர் 31ம் தேதி வரை தமிழகம்
முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் நிலத்தடி நீர்மட்டம் 8 மாவட்டங்களில்
மட்டுமே அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 3.77 அடியும்,
நீலகிரி 3.22 அடி, அரியலூர் 1.66 அடி, திருப்பூர் 1.38 அடி, திருவாரூர்
0.11 அடி, நாமக்கல் 0.07 அடி, ஈரோடு 0.72 அடி, கன்னியாகுமரி 1.58 அடி வீதம்
8 மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் கடந்த 2012ம் ஆண்டை விட
அதிகரித்துள்ளது.மீதமுள்ள 24 மாவட்டங்களில் சென்னையில் 1.56 அடி,
திருவள்ளூர் 0.14 அடி, காஞ்சிபுரம் 0.8 அடி, திருச்சி 2.29 அடி,
திண்டுக்கல் 3.29 அடி, தேனி 4.1 அடி, திருவண்ணாமலை 2.62 அடி, சிவகங்கை 2.5
அடி, வேலூர் 1.2 அடி, தர்மபுரி 1.35 அடி, விழுப்புரம் 1.80 அடி, கடலூர்
1.06, தஞ்சாவூர் 0.44 அடி, நாகை 0.33 அடி, கரூர் 0.25 அடி, பெரம்பலூர் 0.01
அடி, புதுக்கோட்டை 0.56 அடி, சேலம் 1.33 அடி, கோவை 0.90 அடி, மதுரை 0.89
அடி, ராமநாதபுரம் 1.01 அடி, தூத்துக்குடி 0.91 அடி, திருநெல்வேலி 1.18 அடி,
விருதுநகர் 1.30 அடி வீதம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
தொடர்ந்து போர்வெல் மூலமாக தண்ணீர்
உறிஞ்சப்படுவதும், பல இடங்களில் நிலத்தடி நீரை லாரிகள் மூலம் உறிஞ்சி
விற்பனை செய்வது அதிகரித்திருப்பதும், பருவமழை பொய்த்து போனதும் நிலத்தடி
நீர்மட்டம் சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.ஏற்கனவே தமிழகத்திலுள்ள
அணைகளின் நீர்இருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் நிலத்தடி
நீர்மட்டமும் கணிசமாக சரிவடைந்து வருவது நீரியல் நிபுணர்களையே
அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மழைநீர் சேகரிப்பில் அரசு தீவிரம் காட்டினால்
மட்டுமே நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க வாய்ப்புள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...