Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம்?

 
          ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும்6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.

          இந்த சட்டம் பாஜகவினால் 1.1.2004 முதல் அமல்படுத்தப்பட்ட சட்ட விரோதமான புதிய பென்சன் திட்டத்தை அந்த தேதியிலிருந்தே சட்டப்படியானதாக்குகிறது. சட்ட விரோத ஆணையத்தை சட்டப்படையானதாக்குகிறது என்று ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கூறினார்.இந்த சட்டப்படி புதிய பென்சன் திட்டத்தில் வருபவர்களுக்கு ஓய்வூதியம் பங்குச் சந்தையின் லாப நஷ்டத்தை பொருத்தது. லாபத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று சட்டமே கூறுகிறது. குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதமும் இல்லை. குடும்ப ஓய்வூதியமும் கிடையாது. அதுமட்டுமல்ல 1972 பணிக்கொடை சட்டத்தின்படி கூட பணிக்கொடை கிடையாது.

           வருங்கால வைப்பு நிதி கிடையாது. ஊழியருடைய விருப்பம் கேட்காமலேயே கட்டாயமாக அவரை அதில் சேர்க்கவேண்டும். அதுமட்டுமல்ல, 12(5) பிரிவுபடி பழைய ஓய்வூதிய விதியில் வருபவர்களையும் மத்திய அரசு இன்னொரு அறிவிக்கை வெளியிட்டு இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரலாம். மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவர தனி அறிவிக்கைக் கொண்டுவரவேண்டும். நேரடியாக அவர்களுக்கு இது பொருந்தாது. அதனால்தான் கேரளத்தில் இடதுசாரிகள் ஆண்ட போது புதிய பென்சனை அமல்படுத்த மறுத்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழியர்களை ஒரு அறிவிக்கை மூலம் 1.4.2013 முதல் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டுவந்துவிட்டது.

            திரிபுரா அரசும் இடதுசாரிகள் ஆள்வதாலும் மேற்குவங்கத்தில் ஆண்டதாலும் அமல்படுத்தவில்லை.இந்த மசோதா மக்களவையில் வந்தபோது எலியும் பூனையுமாக அடித்துக் கொண்டதுபோல நாடாளுமன்றத்தில் காட்டிய பாஜகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்துகொண்டு மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர்.தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவும்,காங்கிரஸ் பாஜகவுடன் சேர்ந்து ஆதரித்து வாக்களித்தனர். தொல்திருமாவளவன் (விசிக) தலித்துகளுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வேண்டாம், பணிக்கொடை வேண்டாம் என கருதிவிட்டார் போலும். எனவே, அவரும் காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். டி.கே.எஸ். இளங்கோவன் தான் எதிர்த்ததாக பேசிவருகிறார்.

           மாநிலங்களவையில் பேசிய ப.சிதம்பரம் இடதுசாரிகளும் திரிணாமூல் காங்கிரசும் மட்டுமே எதிர்த்ததாகவும் மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதரித்ததாகவும் பேசினார். மக்களவையில் மசோதா மீது ஆதரித்தும் எதிர்த்தும் வாக்களித்தவர்களின் பட்டியல் இப்போது மக்களவை இணையதளத்தில் காணக் கிடைக்கிறது. அதில் இடதுசாரிகளுடன் இணைந்து ஏழு அதிமுக உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளனர். ப.சிதம்பரம் வேண்டுமென்றே இதை மறைத்து அதிமுகவும் அவர்களுடன் சேர்ந்து வாக்களித்தது போல மாநிலங்களவையில் பேசியுள்ளார்.

          மாநிலங்களவையில் வாக்களித்தவர்களின் பெயர்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படுமென்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில முக்கிய திருத்தங்களை இந்த மசோதா மீது கொண்டுவந்தனர்.

                  திருத்தம் 1 : உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வருவாய்“ஓய்வூதிய நிதி மேலாளர்கள் பங்குச் சந்தையிலோ, பத்திரங்களிலோ இடும் மூலதனத்திற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி அளவுக்கு குறைந்தபட்ச வருமானம் உத்தரவாதம் செய்யவேண்டும்.” என்று கட்டாக் உறுப்பினர் ஒரு திருத்தம் கொண்டுவந்தார். இதை இடதுசாரிகளும் அதிமுக உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர். அப்படி உத்தரவாதம் தேவை இலலையென்று காங்கிரஸ், பாஜகவுடன், திமுக, விசிக கட்சிகள் இணைந்து எதிர்த்து வாக்களித்து தோற்கடித்தனர்.

               திருத்தம் 2 : பொதுத்துறைநிதி மேலாளர்கள்மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா இன்னொரு திருத்தத்தைக் கொண்டுவந்தார். “ஓய்வூதிய நிதி மேலாளர்கள் ஒருவர் மட்டும் பொதுத்துறையாய் இருந்தால் போதும் என்பதை மாற்றி அனைவரும் பொதுத்துறையாய் இருக்க வேண்டும்.” என்ற திருத்தத்தை இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுகவும் ஆதரித்து வாக்களித்தது. திமுகவும் விசிகவும் காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து எதிர்த்து வாக்களித்து திருத்தத்தை தோற்கடித்தனர்.

              திருத்தம் 3 : குறைந்தபட்ச ஓய்வூதியம்“குறைந்தபட்ச ஓய்வூதியம் உத்தரவாதம் செய்யப்படவேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமானது மத்திய அரசு ஊழியர்களில் 1.1.2004க்கு முன் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு அது குறையக்கூடாது.” இந்த திருத்தம் நிறைவேறினால் ஆனுவிட்டி கம்பெனிகள் குறைந்தபட்சம் 3500ம் அத்துடன் விலைவாசி ஏறும்போதெல்லாம் பஞ்சப்படியும் சேர்த்து கொடுக்க வேண்டிவரும்.இந்த திருத்தத்தையும் இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர். ஆனால்,காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து திமுகவும் விசிகவும் குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதம் வேண்டாம் என்று திருத்தத்தை எதிர்த்து வாக்களித்து தோற்கடித்தனர். இவர்களின் பட்டியலும் இணையதளத்தில் உள்ளது.

            திருத்தம் 4 : அந்நிய நேரடி முதலீடு“ஓய்வூதிய நிதி நிறுவனங்களில் 26 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு வரலாம். அத்துடன் எப்போதெல்லாம் காப்பீட்டு சட்டம் திருத்தப்பட்டு இந்த சதவீதம் 49, 74, 100 என்று உயருகிறதோ அப்போதெல்லாம் ஓய்வூதிய நிதிநிறுவனங்களிலும் அதே அளவு அன்னிய நேரடி முதலீடு வரலாம்.”

               இதன் மூலம் ஓய்வூதியர்களின் நிதி அந்நியர்களிடம் விடப்பட்டு அவர்கள் அமெரிக்காவில் நடந்ததுபோல சுருட்டிக்கொண்டு ஓடவும் அனுமதி வழங்கப்படுகிறது. ஓய்வூதியர்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். பத்ருகாரி மஹதாப் என்ற ஒரு உறுப்பினர் இதில் 26 சதத்தை ஆதரிக்கிறார்.

              ஆனால், காப்பீட்டு சட்டத்தில் உயரும்போதெல்லாம் உயர்த்தவேண்டும் என்ற அம்சத்தை கைவிட வேண்டுமென்று ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அந்த திருத்தத்தை இடதுசாரிகளும் அதிமுகவினரும் ஆதரித்து வாக்களித்தனர். ஆனால், அந்நிய நேரடி மூலதனத்தை சில்லரை வர்த்தகத்தில் எதிர்ப்பதாக கூறும் திமுகவும் விசிகவும் காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து எதிர்த்து வாக்களித்து இந்த சிறு திருத்தத்தைக் கூட தோற்கடித்தனர்.

               ஒரு சிறு மாற்றமுமின்றி மசோதாவை அப்படியே சட்டமாக்க தமிழகத்தின் திமுகவும், விசிகவும், காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து ஆதரித்து வாக்களித்தனர்.

ஆர்.இளங்கோவன், செயல்தலைவர், டிஆர்இயு

தகவல்: திரு. எங்கல்ஸ், தொடர்புக்கு: engelsdgl@gmail.com




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive