தனியார் கல்வி நிறுவனங்களின்
சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு விதிகள் அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 30
(1)-ன் படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப்
பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களில்
இடஒதுக்கீடு செய்வது தொடர்பாக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்யக் கோரி லயோலா
கல்லூரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: எங்களது கல்வி நிறுவனத்தில்
மாணவர்கள் சேர்க்கையின் போது, மதத்தை அடிப்படையாக் கொண்டு, யாருக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை.
இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு உயர்கல்வித் துறை ஒரு அரசாணை பிறப்பித்தது. அதில், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்,
தனியார் கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்கள்
2012- 13-ஆம் ஆண்டுக்கான சேர்க்கையில்
இடஒதுக்கீடு தொடர்பான வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக ஒரு உத்தரவு
பிறப்பித்துள்ளது.
எனவே சேர்க்கையின் போது இடஒதுக்கீடு
தொடர்பாக அரசு பிறப்பித்த வழிமுறை தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என
மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார்
அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர்
அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில்
வழக்குரைஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகி, லயோலா கல்லூரி
அரசு உதவி பெறும் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடும், மீதம் உள்ள 50 சதவீத இடத்தில் 40 சதவீதம் கிறிஸ்தவர்களுக்கும், மீதம் 10 சதவீதம் கிறிஸ்தவர்கள்
அல்லாதவர்களுக்கும் தகுதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்கிறது. எனவே அரசு உத்தரவை
ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த
உத்தரவு: மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு 2012-ஆம் ஆண்டு பிறப்பித்த வழிமுறைகள், இதர அனைத்து சட்டங்களையும் மீற முடியாது. குறிப்பாக, தமிழ்நாடு சட்டம் 2006-ஐ மீற முடியாது.
மேலும், கடந்த 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையில் கூறப்பட்டுள்ள
தனியார் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு விதிகள்
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 30 (1)-ன் படி
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது.
மேலும், லயோலா கல்லூரியில் அரசு உதவி பெறும் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மீதம் உள்ள 50 சதவீதத்தில் 40 சதவீதம் கிறிஸ்தவர்களுக்கும், மீதம் உள்ள 10 சதவீதத்தில் தகுதி உள்ள அனைவருக்கும் இடம் அளிப்பதாக மனுதாரர் வழக்குரைஞர் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலை மற்றும் உண்மையின் அடிப்படையில் இந்த மனுவை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. எனவே மனு ஏற்கப்பட்டு, 2012-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
good
ReplyDelete