போக்குவரத்து பற்றாக்குறையால் அரசு பேருந்தின்
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 10ம் வகுப்பு மாணவர் தவறி விழுந்து
பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த
அப்பகுதி வாசிகள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
பண்ணூர் அடுத்த சோகன்டி கிராமத்தைச்
சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் அரவிந்த், 15. இவர் சுங்குவார்சத்திரம் -
மப்பேடு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளி செல்ல சுங்குவார்சத்திரம் -
திருவள்ளூர் செல்லும் தடம் டி84ஏ என்ற அரசு பேருந்தில் சோகன்டி பேருந்து
நிறுத்தத்தில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்தின் முன்புற
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.
பேருந்து காலை 8:30 மணிக்கு, பண்ணூர் பேருந்து
நிறுத்தம் அருகே சென்றபோது அரவிந்த் தடுமாறி விழுந்தார். அப்போது,
பேருந்தின் பின் சக்கரம் அவரது உடலில் ஏறி இறங்கியதில் அரவிந்த் சம்பவ
இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, அரசு பேருந்தின் கண்ணாடியை சிலர் அடித்து
நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
விபத்து குறித்து, தகவல் தெரிவித்து ஒரு மணி
நேரமாகியும் காவல்துறையினரும் ஆம்புலன்ஸ் வாகனமும் வரவில்லை. இதனால்,
ஆத்திரமடைந்த மக்கள் சுங்குவார்சத்திரம் - மப்பேடு சாலையில், மறியலில்
ஈடுபட்டனர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து
அவர்கள் கலைந்து சென்றனர். சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்கு
பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் சிலர்
கூறியதாவது: "மேற்கண்ட வழித்தடத்தில் ஐந்து தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர்களுக்கு
இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வழித்தடத்தில் திருவள்ளூர்
பணிமனையைச் சேர்ந்த (டி84ஏ) அரசு பேருந்தும் காஞ்சிபுரம் பணிமனையைச்
சேர்ந்த (தடம் எண் 160) நான்கு பேருந்துகள் மட்டுமே செல்வதால்
பேருந்துகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், மாணவர்கள் படியில்
தொங்கியபடி பயணம் செய்யும் அவலநிலை உள்ளது. எனவே, இனி உயிரிழப்புகள்
ஏற்படாமல் இருக்க பள்ளி நேரங்களான காலை மற்றும் மாலையில் கூடுதல்
பேருந்துகளை இயக்க வேண்டும்." இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழக துணை
மேலாளர் ஒருவர் கூறுகையில், "சுங்குவார்சத்திரம் - திருவள்ளூர் இடையே டி84ஏ
என்ற திருவள்ளூர் பணிமனை அரசு பேருந்து ஒன்று மட்டுமே இயக்கப்படுகிறது.
எங்களிடம், போதிய பேருந்துகள் இல்லாததால் அப்பகுதியில், கூடுதலாக
பேருந்துகளை இயக்க முடியவில்லை" என்றார்.
மேலும், "சுங்குவார்சத்திரம் - மப்பேடு சாலை வழியாக திருவள்ளூருக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை" என்றார்.
"பண்ணூர் - மப்பேடு சாலையில் உள்ள, ஐந்து
பள்ளிகளின் அருகில், வேகத்தடைகள் இல்லை. இதனால், கனரக வாகனங்கள் மற்றும்
இருசக்கர வாகனங்கள் அதிக வேகத்துடன் செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி
விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, பள்ளிகள் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்"
என அந்த பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...