நேர்முகத் தேர்வுகளில் சில சமயங்களில்
கேட்கப்படும் கேள்விகள், நம்மை, எப்படி பதில் சொல்லி சமாளிப்பது என்ற
இக்கட்டில் மாட்டிவிடுவதாய் இருக்கும். அதுபோன்ற கேள்விகள், சீரியஸாக
இல்லாமல், ஒரு ஜாலிக்காக கேட்கப்படுவதாகவும் இருக்கும்.
உதாரணமாக, "நீங்கள் பொய் சொன்னதுண்டா?" என்று
ஒரு கேள்வி கேட்கப்படும். இந்தக் கேள்விக்கு, உடனடியாக, "அதெல்லாம் இல்லவே
இல்லை, எனக்கு அந்தப் பழக்கமே இல்லை" என்று ஆர்வக்கோளாறில்
சொல்லிவிடக்கூடாது. ஏனெனில், "நீங்கள் சொல்வது பொய்" என்று, நேர்முகத்
தேர்வு கமிட்டியினர் முகத்தில் அடித்தாற்போன்று சொல்லி விடுவார்கள்.
மேலும், "ஆம், சொல்லியிருக்கிறேன்" என்று சொன்னாலும், "பொய் சொல்லும்
நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை" என்றும் சொல்வார்கள்.
இந்த விஷயத்தில் நீங்கள் ஒன்றை தெரிந்துகொள்ள
வேண்டும். அதாவது, இது ஒரு சீரியஸான கேள்வி அல்ல. உங்களை சில விஷயங்களில்
அனுமானிக்கவே இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும். எனவே, கீழ்காணும் வகையில் பதில் சொல்லப் பழக வேண்டும்.
ஒரு சாதாரண மனிதன் என்ற முறையில், நான் எனது
குழந்தைப் பருவம் மற்றும் பள்ளி நாட்களில், பொய்களை கூறியுள்ளேன். தேவையற்ற
விடுமுறை எடுத்தபோதும், வீட்டுப் பாடங்களை செய்யாதபோதும்,
தண்டனையிலிருந்து தப்பிக்க, பொய்களைக் கூறியுள்ளேன். ஆனால், ஒரு வயதுக்குப்
பிறகு நான் பொதுவாக பொய் சொல்வதில்லை என்று சொல்லலாம்.
ஏனெனில், தொடர்ந்து சீரியஸாகவே நடந்து
கொண்டிருக்கும் நேர்முகத் தேர்வு செயல்பாட்டில், கொஞ்சம் ஜாலியான சூழலைக்
கொண்டுவர நேர்முகத் தேர்வு கமிட்டியினர் விரும்புகையில், இதுபோன்ற
கேள்விகளை அவர்கள் கேட்கிறார்கள். எனவே, இதை பெரிய சீரியஸாக எடுக்க
வேண்டியதில்லை.
ஏனெனில், நீங்கள் பணி வாய்ப்புக்காக செல்லும்
தொழில் நிறுவனமே, பல பொய்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கவும் வாய்ப்புகள்
உண்டு என்பது வேறு விஷயம். அதேசமயம், ஜாலிக்காக கேட்கப்படும் கேள்வியையும்
கவனத்துடன் அணுகுவது முக்கியம். அவர்கள், உங்களிடம் விளையாடுகையில்,
நீங்களும் பதிலின் மூலம் அவர்களிடம் விளையாடலாம் என்று நினைப்பது பெரிய
தவறாகிவிடும். எனவேதான், இந்த ஆலோசனை.
இன்னும் சில கேள்விகள் இப்படியும் வரலாம்.
அதாவது, "நீங்கள் ஆபாசப் புத்தகம் படித்திருக்கிறீர்களா?" என்பது போன்ற
கேள்விகளும் வரலாம். அப்போது, நீங்கள் படித்திருந்தால், "நண்பர்களுடன்,
தவிர்க்க முடியாத சூழலில், அதைப் படித்திருக்கிறேன். மற்றபடி, அதைப் படிக்க
வேண்டுமென்ற ஆர்வம் எதுவுமில்லை" என்று பதிலளிக்கலாம். இது ஒரு மடத்தனமான
கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம்தான். ஆனால், வேறு சில நோக்கங்களுக்காக
இவை கேட்கப்படுகின்றன.
சில சமயங்களில், "உங்களுக்குப் பிடித்த
நடிகர்கள் யார்? மற்றும் பிடித்த திரைப்படம் எது?" என்பன போன்ற கேள்விகளும்
வரும். இதுபோன்ற கேள்விகளுக்கு சாதாரணமாக, பிடித்ததைக் கூறலாம். அதற்கு
அவர்கள், "ஏன் இந்த நடிகரைப் பிடிக்காதா?" அல்லது "இந்த திரைப்படம் நல்ல
படம்தானே?" என்று மடக்கலாம். ஆனால், இவற்றையும் சீரியஸாக
எடுத்துக்கொள்ளாமல், சாதாரணமாகவே பதில் கூறுங்கள்.
மேற்கூறிய கேள்விகள் கேட்கப்படுவதற்கான முக்கிய
நோக்கம், உங்களின் Mental Balance -ஐ சோதிப்பதே. எனவே, இதற்காக
கோபப்படக்கூடாது. கோபப்பட்டால், உங்கள் வாய்ப்புகளை இழப்பீர்கள். இந்த
உலகம் பல சவால்களையும், விரும்பாத விஷயங்களையும் கொண்டதுதான். எனவே,
அனைத்தையும் எதிர்கொள்ள பக்குவப்பட்ட ஒருவரே, இறுதி வெற்றியாளராய்
ஜொலிப்பார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...