ஜோ டி குருஸ் எழுதிய "கொற்கை" நாவல், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை
கிராமம் உவரியை சேர்ந்தவர் ஜோ டி குருஸ். சென்னை வணிக கப்பல் நிறுவனம்
ஒன்றில் அதிகாரியாக உள்ளார்.இவரது நாவல் "கொற்கை" கடற்கரை வாழ் மக்களின்
கதையை சொல்கிறது. பண்டைக் காலத்தில் முத்து வணிகத்தில் செழித்து விளங்கிய
நெல்லை மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி) கொற்கை துறைமுக பகுதியில்,
1914ல் துவங்கும் நாவலின் கதை 2000 ஆண்டில் நிறைவு பெறுகிறது.
கப்பல் வணிகத்தின் முன்னேற்றம், கொற்கையில் செழித்த பிற தொழில்களின்
விருத்தி, கதை நடக்கும் காலத்தில் இடம்பெறும் அரசியலின் முக்கிய
நிகழ்வுகள், வெள்ளையர்கள் மற்றும் கத்தோலிக்க மத பிரதிநிதிகளின் நிலை என
கொற்கையின் உருமாற்றத்தை பிரமிக்கத்தக்க வகையில் எண்ணற்ற தகவல்களுடனும்,
பாத்திரங்களுடனும் படைத்திருக்கிறார் குருஸ்.
இவர், ஏற்கனவே "ஆழி சூழ் உலகு" என்ற நாவலை எழுதியுள்ளார். நெல்லை தூய
சவேரியார் மேல்நிலைப்பள்ளி, சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ., பொருளாதாரம்,
திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.பில்., பயின்றவர். இவரின் "ஆழி சூழ் உலகு"
நாவலுக்கு இத்தகைய இலக்கிய கவுரவம் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டும்
சாகித்ய அகாடமி விருது, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் செல்வராஜூக்கு
அவரது "தோல்" நாவலுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது குறித்து ஜோ டி குருஸ் கூறுகையில்,
"கடற்கரை சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இதன் மூலம்,
சமவெளி சமுதாய மக்களின் பார்வை, நீர்தேவதையின் மக்கள் மீது படும் என
நினைக்கிறேன். சாகித்ய அகாடமி விருதை எதிர்பார்க்கவில்லை. இலக்கிய
ஜாம்பவான்கள் பிறந்த நெல்லை மண்ணில் பிறந்ததற்காகவும், எனக்கும் விருது
கிடைத்ததற்காகவும் மகிழ்கிறேன்" என்றார்.
இவரது மனைவி சசிகலா, மகன் அந்தோணி டி குருஸ்,11, மகள் ஹேமா டி குருஸ்,10,
ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறார். இந்தி திரைப்பட பாடலாசிரியர், ஜாவேத்
அக்தர், இந்தி நாவலாசிரியர் மிருதுளா கார்க், வங்க மொழி கவிஞர், சுபேத்
சர்கார் உள்ளிட்ட, 22 பேர், இந்தாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு
உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...