மேற்குவங்கத்தின், கோல்கட்டா பிரசிடென்சி
பல்கலைக்கழகத்தில், ஆசிரியர்களின் தரம் மற்றும் கற்றுக் கொடுக்கும் திறனை
மாணவர்கள் மதிப்பிட உள்ளனர். தேர்வு முடிந்தவுடன், மாணவர்களிடம்,
ஆசிரியர்களின் திறன் குறித்து மதிப்பீடு கேட்கப்பட உள்ளது.
மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில், 1817ல்
துவக்கப்பட்டது, பிரசிடென்சி கல்லுாரி. பல ஆண்டுகளுக்கு முன்பே பல்கலைக்கழக
அந்தஸ்து பெற்றுள்ள இங்கு, பொருளாதார மேதை அமர்தியா சென் உட்பட, ஏராளமான
பிரபலங்கள் படித்துள்ளனர். கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களை
மேற்கொண்டுள்ள இந்தக் கல்லுாரி இப்போது ஆசிரியர்களை, மாணவர்கள் மதிப்பீடு
செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
செமஸ்டர் தேர்வு முடிவடைந்ததும், மாணவர்களுக்கு
படிவம் ஒன்று வழங்கப்படும்.அதில் ஒவ்வொரு ஆசிரியரின் கற்பிக்கும் திறன்
எவ்வாறு உள்ளது, ஆசிரியரிடம் பிடிக்காத குணம் என்ன, எந்த ஆசிரியர் சிறப்பாக
கற்றுக் கொடுக்கிறார், அவரிடம் இருந்து கற்ற விஷயங்கள் என்ன? என்பன போன்ற
விவரங்கள், மாணவர்களிடம் கேட்கப்படும்.
மாணவர்கள் அளிக்கும் பதில், ரகசியமாக
வைக்கப்படும் என தெரிவித்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் மாளவிகா சர்க்கார்,
"இந்த முறை, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் வழக்கத்தில் உள்ளது. நம்
நாட்டின் கல்லுாரி, பள்ளிகளில் ஏன் பின்பற்றப்படுவதில்லை என தெரியவில்லை"
என்றார்.
இந்த முறை, இம்மாத இறுதியில் முடிவடையும், செமஸ்டர் தேர்வுக்குப் பின் பின்பற்றப்படும் என, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துஉள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...