"பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு
அறையில் வேடிக்கை பார்த்து கவனத்தை சிதற விடுவதால் அது, நேரத்தை மட்டுமல்ல;
மதிப்பெண்ணையும் இழக்கச் செய்யும்" என, கல்வியாளர் ரமேஷ் பிரபா
தெரிவித்தார்.
குரோம்பேட்டை எம்.ஐ.டி., அரங்கில் நேற்று
நடந்த, "தினமலர்" நாளிதழ் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில்
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், கல்வியாளர் ரமேஷ்
பிரபா பேசியதாவது:
"பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் போது
எல்லாருக்கும் ஒரு நடுக்கம் இருப்பது வழக்கம் தான். பொதுத் தேர்வு எழுதும்
மாணவர்கள் பாடத்தை எப்படி சுலபமாக கையாள்வது என தெரிந்து கொண்டால், எந்த
பிரச்னையும் இல்லை. இதற்கு வழி ஏற்படுத்தி தருவது தான், இந்த ஜெயித்துக்
காட்டுவோம் நிகழ்ச்சி.
பொதுவாக தேர்வு எழுதும் மாணவர்கள், முந்தைய
ஐந்து ஆண்டுகளின் கேள்வித் தாள்களை வைத்து, முக்கிய வினாக்களை தேர்வு
செய்வர். இதில் தவறு இல்லை. ஆனால், அந்த கேள்வித் தாள்களை மட்டுமே
அடிப்படையாக வைத்து சில கேள்விகள் தேர்வுக்கு வராது என்று முடிவு செய்யக்
கூடாது. எல்லா கேள்விகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.
பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வில்
எப்போதும், 10 நிமிடம் கூடுதலாக தேவைப்படும். இதற்கு, மெதுவாக எழுதும்
பழக்கம் ஒரு காரணம். இதை பயிற்சியின் மூலம் சரிசெய்து கொள்ளலாம். ஆனால்,
மாணவர்கள் வேடிக்கை பார்த்து நேரத்தை செலவிடுவதற்கு ஒன்றும் செய்ய
முடியாது.
நீங்கள் வேடிக்கை பார்த்து கவனத்தை
சிதறவிடுவதால், வீணாவது நேரம் மட்டுமல்ல; உங்கள் வாழ்க்கைக்கு தேவையான
முக்கியமான 10 மதிப்பெண்களும் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், குறுக்கு வழியில் ஜெயிக்க வேண்டும்
என்ற எண்ணம் மாணவர்களுக்கு வரக்கூடாது. அதேபோல, தேர்வு முடிவுகள் எதுவாக
இருந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம், மாணவர்களுக்கு வேண்டும்.
தேர்வு முடிவு வெளிவரும் போது பெற்றோர், குழந்தைகளை பக்குவமாக கையாள
வேண்டும்." இவ்வாறு, அவர் பேசினார்.
வெள்ளி பதக்கம்
கடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில
அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கு "தினமலர்" நிறுவனர் உருவம்
பதித்த வெள்ளி பதக்கம் மற்றும் அப்துல் கலாம் எழுதிய "திருப்பு முனை" என்ற
புத்தகத்தை வழங்கினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...