Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறார்களிடையே அதிகரிக்கும் குற்ற செயல்கள் - ஆய்வில் தகவல்


            சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களின் உபயோகத்தால், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடும் சிறார்கள், அதிகளவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் கூர்நோக்கு இல்ல சிறுவர்களிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

               மாறிவரும் கலாசாரத்தின் விளைவாக, உணவு, உடை, பொழுதுபோக்கு என அனைத்திலும் அதிவேக மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதை உள்வாங்கிக் கொள்ளும் சிறார்கள், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதுடன், குற்றச் சம்பவங்களில் அதிகளவு ஈடுபடுகின்றனர். இதற்கு, நண்பர்கள் மற்றும் பெற்றோர்களின் முறை தவறிய நடத்தை, பொழுதுபோக்கு சாதனங்களின் அபரிமித ஈடுபாடு போன்றவை காரணமாக இருப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

            சிறார்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க, மாவட்டம் தோறும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

              இங்கு, பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் மீட்பு, குழந்தை திருமணம் தடுப்பு உள்ளிட்ட, சிறார்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், குற்றச்சம்பவங்களில், கைது செய்யப்படும் சிறார்களை, பெற்றோர் பெயிலில் எடுக்கும் வரை, கூர்நோக்கு மையத்தில் தங்க வைத்து, உளவியல் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

               கூர்நோக்கு மையத்தில் தங்கும் மாணவர்கள் குறித்து, ஆய்வு செய்ததில், திருட்டு சம்பவங்களுக்காக, வரும் சிறார்களே அதிகளவு என்பது தெரியவந்துள்ளது. மேலும், மையத்தில் தங்க வைக்கப்படும் சிறார்களில் பெரும்பாலானோர், பெற்றோர்களின் நடத்தை சரியில்லாததாலும், நண்பர்களின் தூண்டுதலாலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக, தெரியவந்துள்ளது.

               இதுதவிர, திருட்டு உள்ளிட்ட வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவதற்கான ஆர்வமும், குறிப்பிட்ட பொருட்கள் மீது, நீண்ட நாள் ஆசைப்படுவதாலும் திருடுவதாக, பெரும்பாலான சிறார்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கு, நண்பர்கள் வட்டாரத்தின் ஆதரவு பெருமளவில் கிடைக்கிறது.

                     மொபைல் போன், பணம், பைக் போன்றவைகளே, சிறார்கள் அதிகளவு திருடும் பொருளாக இருந்து வருகின்றன. இதற்கு காரணம், இளம் வயதிலேயே, குழந்தைகளுக்கு அதிகளவு பொழுதுபோக்கு சாதனங்களின் பயன்பாட்டை அறிமுகப்படுத்துவதே. குற்றச்சம்பவங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து அறியாமல், விளையாட்டாக இவர்கள் செய்யும் செயல்களால், எதிர்காலம் கேள்வி குறியாகும் வாய்ப்புள்ளது.

                 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது: நண்பர்களின் தூண்டுதல், பந்தயம், காதல் போன்றவற்றால், பெரும்பாலான சிறார்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். பணக்கார மற்றும் அடித்தட்டு மாணவர்களே, இதுபோன்ற குற்றச்செயல்களில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய அடிதட்டு மாணவர்கள் சிலர், பெற்றோர்களின் முறை தவறிய நடத்தையை, ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியடைந்து, குற்றச்சம்பவங்களில் எளிதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

                      கூர்நோக்கு மையத்தில் இருந்து உளவியல் ஆலோசனை பெற வரும், 80 சதவீத சிறார்கள், தங்களுக்கு உள்ளே ஒரு கற்பனை உலகை உருவாக்கி கொண்டு, அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு, வீடியோகேம், சினிமா, ஆபாச பாடல் வரிகளே காரணமாக இருக்கின்றன. மையத்துக்கு வரும் சிறார்களில், பெரும்பாலானோர் 14 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் என்பது வேதனை அளிக்கிறது.

                சினிமாவில் வரும் முரட்டுத்தனமான கதாநாயகனாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு, எப்படி ஆலோசனை வழங்கினாலும், தன்னை மாற்றி கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. இவ்வாறு, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive