செய்தித்துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணிகளில் இனி நேரடி நியமனத்துக்குப் பதிலாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தி ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமீபத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட குற்றச்சாட்டின்பேரில் தமிழக சுற்றுலாத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, அத்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் நேரடி நியமன முறையை ரத்து செய்ய வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உயரிய பொறுப்பு, செய்தி - மக்கள் தொடர்புத்துறைக்கு உள்ளது. ஆனால், இத்துறையில் பணிபுரியும் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிகளும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளும் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் தொடர்ந்து பணியிட மாற்றத்துக்கு ஆளாகின்றனர். உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளை அரசியல் சிபாரிசு அடிப்படையில் நேரடியாக நியமிப்பதால்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடர்கின்றன.அரசியல் பின்னணியில் நியமனம் பெற்றாலும்கூட, அதை பணியில் காட்டாத அதிகாரிகளும் இருக்கின்றனர். சிலர், வெளிப்படையாக தெரியும் வகையில் விசுவாசிகளாக செயல்படும் உண்டு. இதுதான் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. ஒரு ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களை அடுத்து வரும் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் நம்புவதில்லை. இதனால் முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கோ, தொலைதூர மாவட்டங்களுக்கோ அந்த அலுவலர்கள் மாற்றப்படுகின்றனர்.அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகள் சிபாரிசு செய்பவர்களும் செய்தித் துறையில் நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவது, காங்கிரஸ் ஆட்சிக்காலம் முதலே இருந்து வருகிறது.அப்போது மாவட்ட பப்ளிசிட்டி அதிகாரிகள் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர்.
பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு, குடும்ப கட்டுப்பாடு உள்ளிட்ட வேறு துறைகளுக்கு அதிகாரிகள்மாற்றப்பட்டனர்.அதன்பிறகு, நான்கு மாவட்டங்களுக்கு ஒருவர் என்ற அளவில் மண்டல மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பின்னர், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் மக்கள் தொடர்பு அதிகாரிகள் மற்றும் பப்ளிசிட்டி உதவியாளர்கள், செய்தி உதவியாளர்கள் (இதுதான் இப்போது ஏபிஆர்ஓ எனப்படும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பதவி) என்ற புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.1975 எமர்ஜென்சி காலத்தில், சுமார் 59 மக்கள் தொடர்பு அதிகாரிகளின் பதவி ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்று சில ஆண்டுகளில் சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். அது, அதிமுக முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த காலம். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., பணி ரத்து செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தஉத்தரவிட்டார். அன்று முதல், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கு நேரடி நியமனங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில்கூட 43 பேர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டனர். ஆட்சி மாறும்போது, மாற்றுக் கட்சிப்பின்னணியில் பணியில் சேர்ந்தவர்களை பந்தாடும் போக்கும் தொடர்ந்து வருகிறது என்கிறார் ஒரு செய்தித் துறை அதிகாரி.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அரசியல் சாயம் இல்லாத, வேலையில்லா பட்டதாரிகளை டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்மோ.தேன்மொழி கூறுகையில், “போட்டித் தேர்வு நடத்தி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளைத் தேர்வு செய்தால்தான் தரமான பணியாளர்கள் கிடைப்பார்கள். அவர்கள் சிரமப்பட்டு தேர்வெழுதி வருவதால் மக்களின் பிரச்சினையை அறிந்திருப்பார்கள்.எனவே, உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் அரசியல் ரீதியாக நியமிக்கப்படும் முறையை நீக்கிவிட்டு, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் முறையை கொண்டு வரவேண்டும்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...