பொதுத்தேர்வு நடக்கும் மையங்களில், வாடகை
ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த பொதுத் தேர்வில், வாடகை ஜெனரேட்டர் பயன்படுத்தியதற்கான
கட்டண நிலுவையை, உடனடியாக வழங்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,
உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் இப்போதே மின் தட்டுப்பாடு
நிலவி வருகிறது; சென்னையிலும் இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
இதேபோன்ற நிலை தொடர்ந்து நீடித்தால், பொதுத் தேர்வின் போது மாணவர்கள்
பாதிக்கும் நிலை ஏற்படலாம். இதை கருத்தில் கொண்டு, ஜெனரேட்டர் வசதி இல்லாத
தேர்வு மையங்களில், வாடகை ஜெனரேட்டர்களை பயன்படுத்த, தேர்வுத் துறை
நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, ஜெனரேட்டர் தேவைப்படும் தேர்வு மையங்
களின் விவரங்களை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்
துறை உத்தரவிட்டு உள்ளது. தற்போது, இந்த விவரங்களை, முதன்மை கல்வி
அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். கடந்த பொதுத் தேர்வில் பயன்படுத்தப்பட்ட
வாடகை ஜெனரேட்டர்களுக்கான கட்டணத்தையே, பல மாவட்டங்களில், முதன்மை கல்வி
அலுவலர்கள் வழங்காததால், வரும் ஆண்டில், ஜெனரேட்டர் கிடைக்குமா என்ற நிலை
உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி,
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறுகையில்,"
ஏராளமான பள்ளிகளுக்கு, ஜெனரேட்டர் கட்டணம் கிடைக்கவில்லை. பழைய கட்டணத்தை,
முதலில் கொடுக்க வேண்டும். அப்போது தான், வரும் பொதுத்தேர்வுக்கு, வாடகை
ஜெனரேட்டருக்கு ஏற்பாடு செய்ய முடியும்" என்றார்.
தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில்,
"எந்தெந்த தேர்வு மையங்களுக்கு, கட்டண நிலுவை உள்ளதோ, அந்த தொகையை,
உடனடியாக வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களை அறிவுறுத்தி உள்ளோம். வரும்
பொதுத்தேர்வில், வாடகை ஜெனரேட்டர்களுக்கான கட்டணத்தை அளிப்பதில், தாமதம்
ஏற்படாது. தேர்வு முடிந்ததும், தேர்வு மையங்களிடம் இருந்து, பில்களை
பெற்று, உடனடியாக வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
வாடகை ஜெனரேட்டர் உரிமையாளர்கள் சிலர்
கூறியதாவது: கடந்த ஆண்டு போல, இவ்வாண்டும், வாடகைக் கட்டணம் கிடைக்காமல்
ஏமாற மாட்டோம்; கடந்த ஆண்டை விட, டீசல் விலை, பல மடங்கு உயர்ந்து விட்டது;
அதனால், உத்தேச வாடகைத் தொகையை, முன்கூட்டியே கொடுத்தால் தான்,
ஜெனரேட்டர்களை அனுப்ப வேண்டும் என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள்
கூறினர்.
கடந்த பிளஸ் 2 தேர்வு, 2,034 மையங்களிலும்,
10ம் வகுப்பு தேர்வு, 3,112 மையங்களிலும் நடந்தன. வரும் பொதுத்தேர்வு,
எத்தனை மையங்களில் நடக்கும் என்பது தெரியவில்லை. பல மாவட்டங்களில், புதிய
மையங்களுக்கு அனுமதி கேட்டு, தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்து
வருகின்றனர்.
இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களை, நேற்று
முன்தினம், தேர்வுத் துறையிடம், முதன்மை கல்வி அலுவலர்கள்
ஒப்படைத்துள்ளனர். ஜனவரி வரை, புதிய மையங்களுக்கு அனுமதி வழங்கும் பணி
தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடந்த ஆண்டை விட, கூடுதலாக, 50
முதல், 75 மையங்களுக்கு, அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...