சத்துணவு மையங்களுக்கு கடந்த 9 மாதங்களாக
வழங்காமல் இருந்த காய்கறி, விறகு மற்றும் மளிகை பொருட்களுக்கான நிதி
தற்போது 6 மாதத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு தமிழக அரசு சத்துணவு
திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 10ம்
வகுப்பு வரையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்குத் தேவையான
அரிசி, பாமாயில், துவரம் பருப்பு மற்றும் முட்டைகளை அரசு நேரடியாக சத்துணவு
மையங்களுக்கு வழங்கி வருகிறது.
சமையல் செய்வதற்குத் தேவையான மஞ்சள் தூள்,
மிளகாய் தூள், புளி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் மசாலா உள்ளிட்ட
மளிகைப் பொருட்கள், காய்கறி மற்றும் சமைப்பதற்கான விறகு வாங்குவதற்காக
ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாலா 69.5 பைசா
வீதமும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலா 79.5
பைசா வீதம் கணக்கிட்டு சத்துணவு மைய பொறுப்பாளர்களிடம் மூன்று மாதத்திற்கு
ஒருமுறை முன் பணமாக வழங்கப்படும்.
இந்த நிதியை, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து
ஒன்றிய மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு "எல்.எப்.5' கணக்கில்
செலுத்தப்படும். அதனை கமிஷனர்கள், ஒவ்வொரு மையத்திற்கும் பிரித்து
வழங்குவார்கள்.இந்நிலையில் தமிழக அரசு, சத்துணவு மைய பொறுப்பாளர்களுக்கு
வழங்கப்படும் நிதியை, இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் கருவூலம் மூலம் வழங்க
உத்தரவிட்டது. இதற்காக ஒவ்வொரு ஒன்றிய மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும்
சத்துணவு மேலாளர்கள், உரிய படிவங்களை தயாரித்து கருவூலத்திற்கு "பில்'
அனுப்பி, பணத்தைப் பெற்று, சத்துணவு மைய பொறுப்பாளர்களுக்கு வழங்க
வேண்டும்.
ஆனால், சத்துணவு மையத்திற்கான நிதியை
பெறுவதற்கு கருவூலகத்திற்கு அனுப்புவதற்கான "பில்' தயாரிப்பது தெரியாமல்
குழப்பம் நிலவி வருவதால் மாவட்டத்தில் பல ஒன்றியங்களில் சத்துணவு
மையங்களுக்கு நிதி வழங்கவில்லை. சத்துணவு மையப் பொறுப்பாளர்கள் பலர் தங்கள்
மாத ஊதியத்திலிருந்தும், கடைகளில் கடனுக்கு பொருட்களை வாங்கி நிலைமையை
சமாளித்து வந்தனர். ஆனால், 9 மாதங்களாக நிதி வழங்காததால், பொறுப்பாளர்கள்
பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதுகுறித்து கடந்த 2ம் தேதி "தினமலர்'
நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம்
தலையிட்டு, கருவூலகத்திற்கு தாக்கல் செய்யும் பட்டியலை தயார் செய்வதற்கு
ஒவ்வொரு ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மேலா ளர்களுக்கு பயிற்சி அளித்தது.
அதன்பிறகு முதல் கட்டமாக ஏப்ரல் முதல்
செப்டம்பர் வரையிலான 6 மாதத்திற்கான பட்டியல் தயாரித்து கருவூலகத்திற்கு
அனுப்பப்பட்டது. அதையடுத்து இந்த நிதி நேற்று முன்தினம் சத்துணவு மையப்
பொறுப்பாளர்களுக்கு கிடைத்தது.ஒன்பது மாதத்திற்கான நிதியில் 6 மாதத்திற்கு
மட்டுமே வழங்கியுள்ளதால், வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலைக்கு சத்துணவு
மையப்பொறுப்பாளர்கள் ஆளாகியுள்ளனர்.அதனால், நிலுவையில் உள்ள மூன்று
மாதங்களுக்கான நிதியை உடனடியாக வழங்குவதோடு, முன்பு வழங்கியது போல் மூன்று
மாதத்திற்கான நிதியை முன்பணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...