பள்ளிக் கல்வித்துறை மேற்பார்வையில், பெற்றோர் -
ஆசிரியர் கழகம் சார்பில், வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு ஆங்கில "வினா-வங்கி"
ஏடு முன்பதிவில் விற்பனை செய்யும் அளவுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதே
சமயம், தமிழ் வழி புத்தகங்களை வாங்குவதற்கு, மாணவர்கள் முன்வரவில்லை.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களை
தயார்படுத்திக்கொள்ளும் விதமாக, பள்ளிக் கல்வித்துறை மேற்பார்வையில்,
பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் "வினா-வங்கி" ஏடு
அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இப்புத்தகத்தை பயன்படுத்தி, பள்ளிகளில்
மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
கோவை மாவட்டத்தில், கடந்த 2ம் தேதி முதல்
நல்லாயன் உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு துணி வணிக மேல்நிலைப்பள்ளியில்
புத்தகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான
(ஆங்கில வழி) "வினா-வங்கி" ஏடு மூன்று கட்டங்களாக வந்தது.
புத்தகங்கள் விற்று தீர்ந்ததுடன், மேற்கொண்டு
புத்தகம் வேண்டும் என்று 270 மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தமிழ் வழி
புத்தகங்கள் வாங்குவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், கடந்த
கல்வியாண்டில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களே தற்போது, விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ளன.
அதே போல், பிளஸ் 2விலும் ஆங்கில வழி வினா-வங்கி
ஏடு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆங்கில
வழியுடன் ஒப்பிடுகையில், தமிழ் வழி புத்தகங்களின் விற்பனை மிகவும் மந்தமாக
உள்ளது.
இதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் -
ஆசிரியர் கழகத்தால் வெளியிடப்பட்ட வினா-வங்கியை கட்டாயம் வாங்கி பயிற்சி
அளிக்க தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி சுற்றறிக்கை
அனுப்பியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...