அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடாத மாணவ,
மாணவியர்களுக்கும் வரும் கல்வி ஆண்டில் இலவச சீருடை வழங்கிட, சமூக நலத்துறை
மூலம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்காலத்தில், அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, ஒரு நேர
உணவு வழங்கிடும் நோக்கில், மதிய உணவு திட்டம் துவக்கப்பட்டு, எம்.ஜி.ஆர்.,
முதல்வராக இருந்தபோது, சத்துணவாக தரம் உயர்த்தப்பட்டது.
அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச
நோட்டு, புத்தகம், ஜாமென்டரி பாக்ஸ், ஸ்கூல் பேக், லேப்டாப்
உள்ளிட்டவையும், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர்களுக்கு காலனி, நான்கு
செட் சீருடை, தற்போதைய ஆட்சியில் இலவசமாக வழங்குகின்றனர்.
தவிர, சத்துணவை சிறிது மாற்றமாக, 13 வகையான கலவை சாதம், நான்கு வகையான மசாலாவுடன் வழங்கும் திட்டம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு
இலவச சீருடையில், ஏற்கனவே மூன்று செட் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது
நான்காவது செட் சீருடை வழங்கி வருகின்றனர்.
வரும் கல்வி ஆண்டு முதல், அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், சத்துணவு சாப்பிடாத மாணவ, மாணவிகளுக்கு
இலவசமாக சீருடைகள் வழங்கிடும் நோக்கில், மாநிலம் முழுவதுமாக சமூக நலத்துறை
மூலம், தற்போது சீருடை பெறுபவர்கள் விபரம், ஒட்டுமொத்த மாணவர்கள் விபரம்
சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சமூகநலத்துறை அலுவலர்கள்
கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 1 முதல், 5ம் வகுப்பு படிக்கும், 33,421
மாணவர்கள், 34,117 மாணவிகளும், 6 முதல், 8ம் வகுப்பு வரையிலும், 20,246
மாணவர்கள், 21,988 மாணவிகளும், 9ம் வகுப்பு முதல், ப்ளஸ் 2 வரை படிக்கும்
ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவு, 9ம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.ஸி., வரை
பயிலும், 535 மாணவர்கள், 206 மாணவிகளும் சத்துணவு சாப்பிடுவதுடன், அரசின்
இலவச சீருடைகளை பெற்று வருகின்றனர்.
தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி, உண்டு உறைவிட பள்ளி மாணவர்களையும், அரசு பள்ளி மாணவர்களுடன் இணைத்து கணக்கிட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில்
வாரத்தில், மூன்று நாட்கள் சத்துணவு சாப்பிடும் மாணவர்களில் எண்ணிக்கையை
சராசரியாக கொண்டு, சீருடை வழங்கப்பட்டு வருகிறது.
இம்முறையை மாற்றி, அரசு பள்ளிகளில் படிக்கும்
ஒட்டு மொத்த மாணவர்களுக்கும், சீருடைகள் வழங்கும் நோக்கில் கணக்கிட்டு,
அதிகாரிகளுக்கு புள்ளி விபரங்களை கொடுத்துள்ளோம்.வரும் கல்வி ஆண்டுக்கு
முன்பாக முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார்கள், என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...