அரசு கலை கல்லுாரியில், முதல்வர் ஜெயலலிதா
உத்தரவின் பேரில் நடப்பாண்டில், புதிதாக துவங்கப்பட்ட 16 பாடப்
பிரிவுகளுக்கு ஒரு பேராசிரியர் கூட, இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால்,
மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.
திருத்தணியில், சென்னை-திருப்பதி தேசிய
நெடுஞ்சாலையில் அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, ஏழு
இளங்கலை பாடப்பிரிவுகளிலும், ஒரு முதுகலை பாடப்பிரிவிலும், மொத்தம், 1,500
மாணவ, மாணவியர் படித்து வந்தனர். இந்த பிரிவுகளுக்கு, மொத்தம், 40
பேராசிரியர்கள் தேவை. ஆனால், 23 பேராசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர்.
மீதமுள்ள பணியிடங்கள், கடந்த ஒன்றரை ஆண்டாக காலியாக உள்ளன.
கல்லுாரியில், போதிய பேராசிரியர்களை நியமிக்க
வேண்டும் என, மாணவர்கள் பலமுறை சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டம் மற்றும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம்,
முதல்வர் ஜெயலலிதா, திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில் புதிதாக, 16
பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
மேலும், நடப்பு கல்வியாண்டிலேயே (2013 - 2014),
மாணவர் சேர்க்கையும் நடைபெறும் என, அறிவித்தார். இதில், இளங்கலை பட்டப்
படிப்பில், பி.ஏ., தமிழ் இலக்கியம், பி.சி.ஏ., கணினி பயன்பாட்டு இயல்
(ஆங்கில வழி), பி.காம்., வணிகவியல் (பொது), முதுநிலை பட்ட மேற்படிப்பு
மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம் இலக்கியம்,
பொருளாதாரம், எம்.பில்., பொருளாதாரம், வரலாறு, பிஎச்.டி., பொருளாதாரம்,
வரலாறு, எம்.ஏ., தமிழ், எம்.காம்., நிறுமச் செயல் இயல், வணிகவியல் (பொது),
எம்.எஸ்சி., கணினி அறிவியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில்,
நடப்பாண்டில், 350 மாணவ, மாணவியர் புதிதாக சேர்க்கப்பட்டனர்.
ஆனால், இதுவரை, புதிதாக துவங்கப்பட்ட, 16 பாடப்
பிரிவுகளுக்கு, ஒரு பேராசிரியர் கூட நியமனம் செய்யப்படவில்லை. மாறாக,
இளங்கலை பாடப் பிரிவுகளுக்கு பாடம் நடத்தும் பேராசிரியர்களே, புதிதாக
துவங்கப்பட்ட சில வகுப்புகளுக்கு பாடம் எடுக்கின்றனர். பழைய பாடப்
பிரிவுகளுக்கே, பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், புதிய
பாடப் பிரிவுகளுக்கு, ஏற்கனவே பணியாற்றும் பேராசிரியர்கள் செல்வதால், பழைய
மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள்
சிலர் கூறுகையில், "எங்களுக்கு வகுப்புகள் நடத்த, போதிய பேராசிரியர்களை
நியமிக்க வேண்டும் என, கல்லுாரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும்,
இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், விரைவில் உள்ளிருப்பு மற்றும் வகுப்பு
புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றனர்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கல்லுாரி
நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கல்லுாரியில், காலி பணியிடங்கள் குறித்து,
பலமுறை சென்னை பல்கலைக் கழகத்திற்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளோம்.
மேலும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கு, முதல் ஆண்டிற்கு
குறைந்த பட்சம், 20 பேராசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும், நேரில்
சென்று தெரிவித்து உள்ளோம். நிரந்தர பேராசிரியர்கள் அல்லது தற்காலிக
பேராசிரியர்களை நியமிப்பது குறித்து, பல்கலைக் கழகம் தான் முடிவு செய்ய
வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...