உலகம் எத்தனையோ விதமான வேலைகளால்
நிறைந்து இருக்கின்றது. வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது முன்னேற்றத்திற்காகவும், தன்னைச்
சார்ந்தவர்களின் வளர்ச்சிக்காகவும் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறான்.
வேலைகளை வகைப்படுத்தலாம் என்றால் அதன்
என்ணிக்கை கணக்கில் அடங்காத எண்ணிக்கையாக நீள வாய்ப்பிருக்கிறது. வேலைகளின்
துறைகளை வேண்டுமானால் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் அடக்கலாம். அது பார்க்க
எளிதானதாக தெரிந்தாலும் ஒவ்வொரு துறையும் கடல் போன்று பரந்து விரிந்திருக்கிறது
என்பதுதான் உண்மை.
ஒரு துறையை எடுத்துக் கொண்டோம் என்றால், அதில் ஆரம்பம்
முதல் இறுதி வரை பல்வேறு வகையான வேலைகள் இருக்கின்றன. இவை நிறுவனத்திற்கு நிறுவனம், இடத்திற்கு இடம்
மாறுபடுகிறது. மேலும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அலுவலர்களுக்கு ஏற்பவும்
பணியின் தன்மை மாறுகிறது.
வேலைகளின் உருவாக்கம்
உலகம் தடைபடாமல் இயங்குவதற்கு உணவுத்
தொழிலும், உடை வடிவமைப்புத் தொழிலும், மருத்துவத் தொழிலும் சிறப்புற
செயல்பட்டாலே போதும். ஆனால் மனிதன் தனது ஆசைகளை அதிகரிக்க அதிகரிக்க தேவைகள்
ஒன்றன் பின் ஒன்றாக அதிகரிக்க ஆரம்பித்தது. தேவைகள் அதிகரித்ததனால் தேவைகளை
நிறைவேற்றுவதற்காக நபர்கள் தேவைப்பட்டார்கள். இதன் மூலம் பணிகள் அதிகமாக
ஆரம்பித்தது.
கால ஓட்டத்தில் வருமானம் அதிகமாகத்
தரக்கூடியதும், உடைகள் நன்றாக உடுத்தி பார்க்கக்கூடியதுமான வேலைகள் மதிப்பான
வேலைகளாக மக்கள் மனதில் தவறான மாய தோற்றத்தை உருவாக்கியது. இது போன்ற மாய
தோற்றத்தில் சிக்கியதன் காரணமாக குறிப்பிட்ட ஒரு சில வேலைகளுக்கான போட்டி
அதிகமானது.
ஓரே வேலைக்கு அதிகமான நபர்கள்
போட்டியிட்டதை கண்ட பிறரும், அந்த வேலையில் ஏதோ ஒன்று இருக்கிறது; அதை தாங்களும் பெற வேண்டும் அல்லது
தங்கள் வாரிசுகள் அந்த பணிகளை பெற வேண்டும் என்று, குறிப்பிட்ட பணி சார்ந்த ஆசையை
போட்டியிட்டு வளர்த்தனர்.
பணி சார்ந்த ஆர்வம்
பணி சார்ந்த ஆர்வம் அதிகரித்ததன்
காரணமாக தாழ்வான பணிகள் என தாங்களாகவே நினைத்த வேலைகளை எல்லாம் புறந்தள்ள
ஆரம்பித்தனர். இதன் காரணமாக பாதிப்புள்ள பணிகளுக்கான தேவைப்பாடுகள் அதிகரித்ததே
தவிர, கொடுக்கப்படும் ஊதியம் அதிகரிக்கப்படவில்லை.
மேலும் பெரிதாக கண்டுகொள்ளப்படாத ஒரு
சில வேலைகள் கால ஓட்டத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உருப்பெறவும்
ஆரம்பித்தது. குறிப்பாக அரசாங்க வேலைகள். ஒரு காலத்தில் விவசாயம் சிறப்புற
செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமை, அப்படியே தலைகீழாக மாறி, இன்று விவசாயம்
செய்பவர்களுக்கான மரியாதை மக்களால் போதிய அளவில் கொடுக்கப்படாத நிலையில்
இருக்கிறது.
இதே போன்று பாதிக்கப்பட்ட வேலைகளும், புதியதாக
மதிப்புப் பெற வைக்கப்பட்ட வேலைகளும் அதிகம். இந்த மாற்றங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும்
வாழ்க்கை முறையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மனித மனங்களுக்கிடையேயான இடைவெளியை
அதிகரிக்கச் செய்துவிட்டது.
வேலைகளை நோக்கிய பயணம்
வேலைகள் குறித்த எண்ணங்கள் குழந்தைகள்
மனதிலும் சிறு வயதில் இருந்தே புகுத்தப்பட்டு சுதந்திரமான சிந்தனைகளும், அறிவு சார்
ஆர்வமும் கத்தரிக்கப்பட்டு மருத்துவம், பொறியியல், உயர் அரசுப்
பதவிகள் என ஒரு கைதியைப் போன்று அனுமதிக்கப்பட்ட பணிகளை மட்டுமே பார்ப்பதற்கு
கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு
சுதந்திரமான எண்ணங்களும், தனி மனிதனின் அர்ப்பணிப்பும் அவசியமானது என்பதனையும் மறந்து
கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் புறக்கணிக்கும் வகையில் உடனடியாக அதிக வருமானம்
தரக்கூடிய வேலைகளை தங்கள் குழந்தைகளும் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
கட்டாயப்படுத்துதல் எனும் தேவையில்லாத
கட்டுப்பாடு தனி மனித பாதிப்பு மட்டுமல்ல சமுதாயத்தின், சமுதாயங்களால்
கட்டமைக்கப்பட்ட நாட்டின் வளர்ச்சிக்கும் பாதிப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர
வேண்டும்.
எல்லாம் சிறந்ததே
ஏனெனில் ஒரு வேலையானது தடைபட்டதன்
தொடர்ச்சியாக இடைஞ்சல்கள் உண்டானால் அந்த வேலை சிறந்த வேலையே. ஒரு வேலையை நம்மால்
செய்ய முடியாது என்றாலும் அந்த வேலை மதிப்பு வாய்ந்ததுதான். எனவே எந்த ஒரு
வேலையும் தரம் குறைவானது, தரம் கூடியது என்பது கிடையாது. ஏனெனில் அனைத்து வேலைகளும்
அவசியமானதாகவும், புறந்தள்ள முடியாத ஒன்றாகவும் இருக்கிறது.
அனைத்து வேலைகளும் சமமானதே. மனம் தான் பிரிவுகளுக்கும், பிளவுகளுக்கும் மூல காரணமாக அமைகிறது. பார்க்கும் பார்வையை மாற்றினாலே, சிந்தனைகள் தெளிவடையும். உற்சாகமும், மகிழ்ச்சியும் தரக்கூடிய அவசியமான வேலைகள் அனைத்தும் சிறந்த வேலையே.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...