மதுரை மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின்
சம்பளம் பிடித்தத்தில், பொது சேமநல நிதி (ஜி.பி.எப்.,) புதிய
ஓய்வூதிய திட்டம் (சி.பி.எஸ்.) சந்தா தொகையில், பல்வேறு குளறுபடிகள்
உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்பிரச்னையால்
2011ம் ஆண்டிற்குப்பின் சம்பளத்தில் பிடித்தம் செய்த மொத்த தொகை விவரம்
எவ்வளவு என்பதே பலருக்கு தெரியாத நிலையில் தவிக்கின்றனர்.அரசு
ஆசிரியர்களுக்கு, ஜி.பி.எப்., மற்றும் சி.பி.எஸ். கணக்கின் கீழ்
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களின் ஓய்வூதிய திட்டக் கணக்கில்
சேர்க்கப்படும். இதில்தான் ஆசிரியர்கள் பலருக்கு சந்தா தொகை விடுபட்டு
போனதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர்கள் சம்பளப் பட்டியல் தயாரிக்கும்
தலைமையாசிரியர் சிலர், ஜி.பி.எஸ்., சி.பி.எஸ்., எண்களை தவறாக
குறிப்பிடுதல், தவறான தலைப்புகளில் பிடித்தம் செய்தல், கருவூல எண்
குறிப்பிடும் "வவுச்சர்' எண்களை தவறாக பதிவு செய்தல் போன்ற காரணங்களால்
இப்பிரச்னை ஏற்படுகிறது. இதுபோன்ற தவறுகளை சரிசெய்ய ஒவ்வொரு மாதமும் 12,
13, 14ம் தேதிகளில், "ஒப்பீட்டு பணிக்கான ஆய்வு கூட்டம்' நடக்கின்றன. ஆனால்
இது பெயரளவில் நடக்கிறது.
இதனால், ஆசிரியர்களின் விடுபட்ட தொகையை பல
ஆண்டுகளாக சரிசெய்ய முடியாமல் தவிக்கின்றனர். பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட
செயலாளர் முருகன் கூறியதாவது:இப்பிரச்னை குறித்து கலெக்டர், கருவூல
அதிகாரி, முதன்மை கல்வி அலுவலரிடம் ஏற்கனவே புகார் அளித்தோம்.
பெரும்பாலும், சம்பள பட்டியலில் தலைமையாசிரியர் குறிப்பிடும் எண்,
கருவூலத்தில் வழங்கப்படும் "வவுச்சர்' எண் ஒன்றாக இருப்பதில்லை. இதை
திருத்தி மாநில கணக்காளருக்கு அனுப்பி வைத்தாலும் ஏதாவது காரணம் சொல்லி
"சரியாக பொருந்தவில்லை' என்று பதில் அளிக்கின்றனர்.இதுபோன்ற காரணங்களால்,
2011ம் ஆண்டிற்குபின், சி.பி.எஸ்., திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட
சரியான தொகை விவரங்கள் ஆசிரியர்கள் பலருக்கு இதுவரை கிடைக்கவில்லை. மேலும்
இத்திட்டத்தில் அவசர தேவைக்கு கடன் பெறமுடியவில்லை. எனவே, இத்திட்டத்தை
ரத்து செய்ய வேண்டும். இப்பிரச்னை குறித்து கல்வித்துறை இயக்குனருக்கும்
புகார் அளிக்க உள்ளோம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...