பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு நேரடியாக
மத்தியஅரசு யு.ஜி.சி.,மூலம் நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த மாநில
உயர்கல்வி கவுன்சில்கள் மூலம் அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
திட்டமிட்டு வருகிறது. அதே போல மாநில தரமதிப்பீட்டு கவுன்சில் அமைக்கவும்
பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும்,
டாடா சமூக அறிவியல் நிறுவனமும் இணைந்து, தேசிய உயர்கல்விக்கான மிஷன்
(ராஷ்டிரிய உச்சதர் சிக்ஷா அபியான்) (ரூசா) என்ற திட்டத்திற்கான வரைவு
அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: உயர்கல்வி படிக்கும்
மாணவர்களில் 6 சதவீதம் ( 5 லட்சம் பேர்) தான் மத்தியஅரசு நிதியுதவி பெறும்
கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். மீதி 94 சதவீதத்தினர் ( 79 லட்சம்
பேர்) மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில்
படிக்கின்றனர். மத்திய அரசு நிதி அளித்தாலும் அதை பெறுவதற்கான திறன், மாநில
கல்வி நிறுவனங்களுக்கு குறைவாகவே உள்ளது.
அதிக நிதி அளிப்பதால் மட்டுமே மாநில உயர்கல்வி
நிறுவனங்கள் முன்னேறும் என கூறமுடியாது. அவற்றில் பல சீர்திருத்தங்களை
கொண்டு வர வேண்டும். மத்திய நிதியை மாநில கல்வி நிறுவனங்கள் பெறுவதற்கான
இடையூறுகளை நீக்க வேண்டும். மத்திய அரசு பட்டமளிக்கும் கல்வி நிறுவனங்கள்
13 சதவீத வளர்ச்சியடைந்துள்ளன. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி
நிறுவனங்கள் 4.5 சதவீதம் தான் வளர்ந்துள்ளன.
தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை
அதிகம் இருந்தாலும், அவற்றின் தரம், வளர்ச்சி போதியதாக இல்லை. 80 சதவீத
தொழிற்கல்வி நிறுவனங்கள் 5 மாநிலங்களில் தான் உள்ளன. இவை பெரும்பாலும்
தனியார் கட்டுப்பாட்டில் உள்ளன. நாடு முழுதும் சமமான கல்வி வளர்ச்சி என்ற
லட்சியத்தை, வணிகரீதியான இந்த வளர்ச்சி பாழாக்குகிறது.
தற்போது பல்கலைகளில் இணைவிப்பு முறை,
பாடத்திட்டம், தேர்வு ஆகியவற்றில் குறைபாடுகள் உள்ளன. பல்கலைக்கழக துறைகளே
பலவீனமாக உள்ளன. ஒரு பல்கலை நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளை
மேற்பார்வையிட வேண்டியுள்ளது.
மத்திய நிதி அளிப்பதில் மாற்றம்: தற்போது
பல்கலைகளுக்கு யு.ஜி.சி., மூலம் நிதி அளிக்கப்படுகிறது. இதை மறுஆய்வு செய்ய
வேண்டும். "பல்கலைகள், கல்லூரிகளுக்கு நேரடியாக மத்திய அரசு நிதி
அனுப்புவதால், அவற்றை எப்படி நாங்கள் மேற்பார்வையிட முடியும்" என மாநில
அரசுகள் கூறுகின்றன.
நாடு முழுதும் 33,093 கல்லூரிகள் உள்ளன. இதில்
6,417 கல்லூரிகளே மத்திய நிதி பெற தகுதியானவை. புதிய திட்டத்தை ஏற்படுத்தி,
அனைத்து பல்கலைகள், கல்லூரிகளும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெற
வழிவகுக்க வேண்டும். அப்போது தான் அவற்றின் திறன் அதிகரிக்கும். மாநில
உயர்கல்விக்கு மத்திய நிதி நேரடியாக செல்ல வேண்டும்.
உயர்கல்வி வளர்ச்சி மாநிலத்திற்கு மாநிலம்
மாறுபட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப நிதியுதவி, ஆதரவு
அளிக்க வேண்டும். இந்திய அளவில் உயர்கல்வி பரந்துபட்டது. மாநிலஅரசுகளால்
மட்டுமே, அவற்றை நிர்வகிக்க முடியும்.
நிதி பகிர்வு: உயர்கல்வி நிறுவனங்களுக்கு
மத்திய, மாநில அரசுகள், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் 90:10
சதவீதம், சிக்கிம், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் 75:25,
மீதியுள்ள மாநிலங்களில் 65: 35, மற்றும் தனியார் மற்றும் நிதியுதவி பெறும்
கல்வி நிறுவனங்களில் 50:50 சதவீதம் என நிதிபகிர்வு செய்து கொள்ளலாம்.
மேலும், கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீட்டிற்கு, மாநிலஅளவில் மதிப்பீடு
செய்யும் அமைப்பு உருவாக்கப்படும்.
இவற்றை ஏற்படுத்த "நாக்" உதவி செய்யும். ஒரு
பல்கலையின் கீழ் 100 கல்லூரிகளுக்கு மேல் இணைவிப்பு இராது. இதனால்
பல்கலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.தன்னாட்சி கல்லூரிகள் பல்கலையாக மாற
ஊக்குவிக்கப்படும். மாநிலங்களில் உயர்கல்வி மன்றங்களை உருவாக்கி, 5
ஆண்டுகளில் அதை சட்டரீதியான அமைப்பாக மாற்ற வேண்டும். 25 ஆண்டு பழமையான
கல்லூரிக்கு தன்னாட்சி, 50 ஆண்டு பழமையான கல்லூரிக்கு பட்டம் வழங்கும்
அதிகாரம் ஆகியவற்றை வழங்கலாம், என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கை குறித்து சமீபத்தில், தமிழக
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடந்த அனைத்து பல்கலை
துணைவேந்தர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...