Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்வழிப் பள்ளிகளின் வளர்ச்சியும் தளர்ச்சியும்


          தமிழ்வழிக் கல்வியை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டும் பள்ளிகள் நம் தமிழ் வழிப்பள்ளிகளும் தாய்த் தமிழ் பள்ளிகளும். அப்பள்ளிகளின் வளர்ச்சியைப் பற்றியும் அவற்றின் தளர்வு நிலைகளைப் பற்றியும் காண்போம்.

தொடக்கக் காலத் தமிழ்வழிப்பள்ளிகள்

தொடக்க காலப் பள்ளிகள் நம் தாய்மொழியான தமிழில்தான் அமைந்தன என்றறிவோம். ஆங்கில மாயையும் அடிமை மனநிலையும், கல்வியை வணிகப் பொருளாய் மாற்றிய இழிவும் ஆங்கிலப் பள்ளிகளைத் தெருவெங்கும் தொடங்கச் செய்தன. தமிழும் கல்வியும் தடுமாறின.

இந்த நிலையில் தமிழில்கல்வி தரும் முயற்சியில் பலர் முயன்றனர். உண்மையில் அந்த வகையில், முதற் பள்ளியைத் தொடங்கியவர், நாமறிந்த வகையில் திரு, பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள். இது ஒரு நல்ல திட்டமிட்ட முயற்சி. பதின் நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் தொடங்கினார் அவர். ஏறக்குறைய, அதே காலக்கட்டத்தில்தான் திருவாட்டி இறை பொற்கொடி அவர்கள் சென்னையில் திருவள்ளுவர் பள்ளிக் கூடத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து எழுந்த தமிழ்ப் பள்ளிகள்

இவற்றைத் தொடர்ந்து 1993இல் அம்பத்தூரில் திரு. தியாகு அவர்கள் தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினார். ‘தாய்த் தமிழ்ப்பள்ளி’ என்ற பெயரோடு தொடங்கப்பெற்ற முதற்பள்ளி இது.

1994இல் சென்னைக்கருகே குன்றத்தூரில் திரு. வெற்றிச்செழியன் அவர்கள் ‘பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி’யைத் தொடங்கினார். தமிழ் அறிஞர் பெயரைத் தாங்கி ஆங்கில வழிப்பள்ளிகளுக்கு மாற்றாக தமிழ்வழியில் நடத்தப்படும் பள்ளி என்ற கருத்தியலைப் பெயரிலேயே தாங்கி, தொடங்கப்பட்ட முதற்பள்ளி இது.

தொடர்ந்த ஆண்டில் கரூரில் திரு. காமராசு அவர்கள் ‘சக்தி பள்ளிக் கூடத்தையும்’ திருப்பூரில் திரு. தங்கராசு அவர்கள் ‘தாய்த்தமிழப் பள்ளியையும் தொடங்கினர்.

தமிழ்வழிப் பள்ளிகளின் வளர்ச்சி

தமிழ்வழியில் பள்ளிகளைத் தொடங்கி நடத்துதல் என்ற கருத்து மெல்ல வேருன்றியது. அரசுப் பள்ளிகளின்மேல் நம்பிக்கை குறைந்த நிலையில் தமிழ் ஆர்வளர்கள் குமுகாய உணர்வாளர்கள் தமிழ்வழியில் பள்ளியைத் தொடங்கினால், மக்கள் விரும்பிப் படிப்பர், என்ற நம்பிக்கை, ஆசை பலரிடம் எழுந்தது.

தொடர்ந்த ஆண்டுகளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புதுவையிலும் பரவலாகத் தமிழ்வழியில் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

தொடக்கக் கல்வியை முழுமையாகத் தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்பதை முன்னிறுத்தி தமிழ்வழிக் கல்விக்கான 102 தமிழறிஞர்களின் சாகும் வரை உண்ணா நிலை போராட்டம் தமிழகக் கல்வி வரலாற்றில், ஏன் தமிழக வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் நோக்கம் ஆட்சியாளர்களாலும், கல்வி வணிகர்களாலும் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டாலும் அது தமிழ்வழிக் கல்விக்கான ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தியது. அக்காலக் கட்டத்தில் பல புதிய பள்ளிகள் தமிழ்வழியில் தொடங்கப்பட்டன.

சிக்கலில் தமிழ்வழிப்பள்ளிகள்

கிபி 2000க்கு முன்பே சில தமிழ்வழிப் பள்ளிகள் மூடப்பட்டன. சில ஆங்கில வழிப்பள்ளிகளாக மாறிப்போயின. பொள்ளாச்சி மகாலிங்கம் தொடங்கிய பதின் நிலைப் பள்ளியில் தமிழ்வழி என்பது ஆங்கில வழி என மாறிப்போனது. தமிழில் பதின் நிலைப்பள்ளிகளுக்கான பாடநூல்கள் இல்லை. அரசு பதின் நிலை(மெட்ரிக்கு)த் தேர்வை ஆங்கில வழியில் மட்டுமே நடத்தி வந்த நிலை அப்பள்ளியை மூட வைத்தது. (திரு மகாலிங்கத்தால் அவற்றை எதிர்கொண்டு நடத்தியிருக்க முடியாதா என்ன!)

கிபி 2005 இல் குடந்தையில் ஓர் ஆங்கில வழிப்பள்ளியில் ஏற்பட்ட கொடுந்தீ நேர்ச்சி தமிழகக் கல்வி வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கப் பள்ளிகள் அனைவராலும் உற்று நோக்கப்பட்டன.

பள்ளிக் குழந்தைகளைத் தீயிடம் வாரிக்கொடுத்தது அந்த ஆங்கில மாயையும் கல்வி வணிக வெறியும் என்பது மறைக்கப்பட்டு, சூழல் மாசுபாடற்ற, இயற்கையோடு இயைந்த கீற்றுக் கொட்டகையின் மீது பழிபோடப்பட்டது. பள்ளிகளுக்கான கட்டட உறுதி, காப்பு சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்டது. ஆங்கிலக் கல்வி வணிகம் முறைப்பட விரிவு செய்யப்பட்டது. இங்கும் பெரிதும் சிக்கல்களைச் சந்தித்தவை நம் தமிழ்வழிப்பள்ளிகளே, தாய்த்தமிழ்ப் பள்ளிகளே! அவற்றுள் பல மூடப்படும் நிலை ஏற்பட்டது.

தொடரும் நம்பிக்கைகள்

இவற்றையெல்லாம் தாண்டி சில பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மிகச் சில நல்ல வளமையான நிலையிலும் மற்றவை மிகுந்த போராட்ட நிலையிலும் அவற்றை எதிர் கொண்டு, தமிழ்வழியில் நடைபெற்று வருகின்றன.

அன்மை ஆண்டுகளில் சில பள்ளிகள் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, உண்டு உறைவிடப் பள்ளி எனத் தொடங்கப்பட்டுள்ளன. அவை நன்கு திட்டமிட்டு முழுமையான ஏந்துகளுடன் தொடங்கப்பட்டுள்ளமை சிறப்பு.. அவற்றையெல்லாம் தொடர்ந்து காண்போம்…




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive