நாமக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு
கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், இரண்டு போட்டித் தேர்வு மையங்களால், மைய
நூலகத்தில் இருக்கும் 30 ஆயிரம் போட்டித் தேர்வு புத்தகங்கள், முடங்கிக்
கிடக்கிறது.
நாமக்கல் நகரில், பொதுநூலகத்துறையின், மாவட்ட
நூலக ஆணைக்குழு சார்பில், கிளை நூலகம் மற்றும் போட்டித் தேர்வுக்கான
பயிற்சி மையம், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டிடம் கட்டப்பட்டு,
கடந்தாண்டு, ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
அதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட போட்டித்
தேர்வில், அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற
நோக்கத்திற்காக, நூலகத்துறைக் கட்டுப்பாட்டில், தன்னார்வ அமைப்புகளின்
உதவியோடு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் உருவாக்கப்பட்டு
வருகின்றனர்.
பயிற்சி மையத்தில், தமிழ் மற்றும் ஆங்கில
நாளிதழ்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட வார, மாத இதழ்கள், போட்டித்
தேர்வுக்கான, 1,810க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. தினமும், 50க்கும்
மேற்பட்ட மாணவர்கள், படித்துச் செல்கின்றனர். சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில், ஆறு சிறப்பு பயிற்சியாளர்கள், மாணவர்களுக்கு, காலை,
10 மணி முதல், 5 மணி வரை வகுப்புகள் எடுக்கின்றனர்.
ஓராண்டாக செயல்பட்டு வரும் மையத்தில், சிலர்
டி.என்.பி.எஸ்.ஸி., நடத்திய போட்டித் தேர்வுகளில் வெற்றியடைந்து, அரசுப்
பணிக்கு சென்றுள்ளனர். இருந்தும், நடப்பு செய்திகள், காலத்திற்கு ஏற்ற
அறிவுப்பூர்வமான மாற்றங்களை தருகிற புத்தகங்கள் பற்றாக்குறையால்,
போட்டியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட மைய நூலகத்தின்
மேல்மாடியில், போட்டித் தேர்வர்களுக்கான, சிறப்பு நூலகம், தனியாக
செயல்பட்டு வருகிறது. அதற்கென்று அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 30
ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த
காலங்களில், இந்த மையத்தின் மூலமாகவே, மாணவர்கள், தங்களை போட்டித்
தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டனர்.
ஆனால், போட்டித் தேர்வுக்கு என்று பிரத்யோகமான
நூலகம், தற்போது உள்ளதால், மைய நூலகத்தில் உள்ள போட்டித் தேர்வு மையம்
செயல்படாமல் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள், புதிய மையத்துக்கே சென்று
படித்து, பயிற்சிப் பெற்று வருகின்றனர். அதில், அவர்களுக்கு தேவையான
புத்தகம் இல்லை என்றால்தான், மைய நூலகத்துக்கு வருகின்றனர்.
அதனால், மைய நூலகத்தில் உள்ள, 30
ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகத்தை, புதிய போட்டித் தேர்வு பயிற்சி
மையத்தில் சேர்க்க வேண்டும். அதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர்களை மாற்றி
அமைக்க வேண்டும் என, போட்டித் தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூலக அலுவலர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில்
உள்ள அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், போட்டித் தேர்வுக்கான பயிற்சி
மையம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், அதே போல், கடந்த
காலங்களில் செயல்பட்டது.
ஆனால், தற்போது, நவீன முறையில் போட்டித்
தேர்வுக்கு என பிரத்யேகமான பயிற்சி நூலகம் அமைக்கப்பட்டதால், மாணவர்களின்
வருகை, மைய நூலகத்துக்கு குறைந்துள்ளது. அதனால், அவர்கள் பயன்படுத்தி வந்த,
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுக்கான புத்தகங்களின் பயன்பாடு
குறைந்துள்ளது.
புதிய போட்டித் தேர்வு மையத்தில், மைய
நூலகத்தில் உள்ள போட்டித் தேர்வு புத்தகங்களை சேர்ப்பது என்பது குறித்து,
உயரதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...