சுற்றுலா பயணிகளுக்கும், புனித யாத்திரை செல்பவர்களுக்கும் மிகச் சிறந்த இடம் ராமேஸ்வரம்.
ராமேஸ்வரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை
கடல் பாலத்தில் ரெயிலில் செல்லும் மகிழ்ச்சியான நினைவுதான்.
நடுக்கடலில் ரெயிலில் செல்லும் போது சுற்றிலும் கடல் சூழ நடுக்கடலில்
ரெயிலில் பயணிக்கும் போது அந்த பயணம் ஒரு சுகமான அனுபவமாக இருக்கும்.
பாம்பனையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் இந்த பாலம் இந்திய பாரம்பரிய வரலாற்று சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இப்போது பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையே பிரமாண்டமான மேம்பாலமும்
உள்ளது. இந்த பாலத்தின் மீது வாகனங்களில் செல்பவர்களும் இறங்கி நின்று
ரெயில் பாலத்தையும், அதில் ரெயில் செல்லும் அழகையும் பார்த்து ரசித்து
செல்கிறார்கள்.
இந்த அழகிய பாம்பன் ரெயில் பாலத்துக்கு வருகிற பிப்ரவரி மாதம் 24–ந் தேதி
100 வயது பிறக்கிறது. இந்த புகழ் பெற்ற பாலத்தின் நூற்றாண்டு விழாவை
கோலாகலமாக கொண்டாட ரெயில்வே துறை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த நேரத்தில் இந்த பாலம் பிறந்த வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம்.
இந்த பாலம் இல்லாத காலகட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து
ராமேஸ்வரம் புனித யாத்திரை செல்பவர்கள் மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை
படகுகளில் சென்று வந்தனர்.
பாம்பன் சென்றடைந்ததும் குதிரைகளில் ராமேஸ்வரம் தீவில் பயணத்தை
தொடர்வார்கள். 2.3 கி.மீ தூரமுள்ள இந்த கடலின் மீது ரெயில் பாலம் அமைக்கும்
திட்டத்தை ஜெர்மன் ஸ்கெர்சர் உருவாக்கினார்.
இந்த பாலம் கான்கிரீட் தூண்களால் மிக நேர்த்தியாக கட்டப்பட்டது. கப்பல்கள்
கடந்து செல்ல வசதியாக பாலத்தின் நடுவில் 65.23 மீ தூரத்துக்கு தூக்கு பாலம்
அமைக்கப்பட்டது. கப்பல் வரும் போது இந்த பகுதி தனியாக பிரிந்து வழி
கொடுக்கும். இந்த ரெயில் பாலம் 1914–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24–ந் தேதி
திறக்கப்பட்டது.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
1964–ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய பயங்கர புயலில் பாம்பன் பாலத்தில் பல பகுதிகள் சேதம் அடைந்தது. தண்டவாளம் அடித்து செல்லப்பட்டது.
என்ஜினீயர் ஸ்ரீதரன் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு சில மாதங்களிலேயே பாலத்தை சீரமைத்தது.
ஜெர்மன் என்ஜினீயர் உருவாக்கிய தூக்கு பாலம் 84 ஆண்டுகள் கழித்து கடந்த 1998–ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்த பாதையை அகல ரெயில் பாதையாக அமைக்கும்
பணி கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கியது. இதனால் ரெயில் போக்குவரத்து
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பணிகள் முடிந்து 2007–ம் ஆண்டு
மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறு கப்பல் ஒன்று மோதியதில் ரெயில்
பாலத்தின் தூண் சேதம் அடைந்தது. ஒரு வாரத்தில் அவை சீரமைக்கப்பட்டு ரெயில்
போக்குவரத்து தொடங்கியது.
இந்தியாவின் 2–வது நீளமான கடல்பாலம் என்ற பெருமை பெற்ற இந்த பாலத்தின்
100–வது பிறந்த நாள் விழாவை ரெயில்வே துறை ஒரு வாரம் கொண்டாடுகிறது.
விழா ஏற்பாடுகள் தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி அஜய்காந்த் ரஸ்தோகி
நேற்று பாம்பன் சென்று ஆய்வு செய்தார். அவர்கூறும் போது, விழாவையொட்டி
சிறப்பு தபால் தலை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...