"மத்திய அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 10
ஆண்டுகளில் 16 மடங்கு உயர்ந்துள்ளது; எதிர்காலத்திலும் நிதி ஒதுக்கீடு
உயரும் வாய்ப்பு உள்ளது" என, தென் மண்டல தொழில்கள் கூட்டமைப்பு தலைவர்
சந்தானம் பேசினார்.
கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில்
"உயர்கல்வியில் மாபெரும் மாற்றங்கள்; ஆளுமை, ஆராய்ச்சி, புதுமை
கண்டுபிடிப்பில் சிறப்புகள்" குறித்த கருத்தரங்கு லீ மெரிடியன் ஓட்டலில்
நடந்தது.
தமிழ்நாடு தொழில் கூட்டமைப்பின் துணைத்தலைவர்
ரவிசாம் பேசுகையில், "இந்திய கல்வி முறையில் பள்ளிப்படிப்பை முடித்து
பட்டம் பெறுவோர் பாதியாகவே உள்ளனர். பட்டம் படித்தவர்களில் உயர்கல்விக்குச்
செல்வோர் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர். கல்வி கற்றவர்களில் 20 சதவீதம்
பேர் தான் தொழிலிலும், பணியிலும் சிறப்பாக செயல்படுகின்றனர். 80 சதவீதம்
பேர் திறமையற்றவர்களாகவே இருக்கின்றனர். தொழில் நிறுவனங்களுக்குத்தேவையான
திறன் உள்ளவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர்" என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர்
சந்தானம் பேசியதாவது: "சர்வதேச வேலைச் சந்தையில் எதிர்காலத்தில் திறமைக்கு
நல்ல தேவை இருக்கிறது. இந்தியாவில் உள்ள 33 ஆயிரம் கல்லூரிகளில், மூன்றில்
இரண்டு பங்கு தனியார் கல்லூரிகள் உள்ளன. இந்திய அளவில் உள்ள கல்லூரிகளில்
தேசிய கல்வி அங்கீகாரக்குழு "நாக்" கமிட்டி, 90 சதவீத கல்லூரிகளை சராசரி
மற்றும் அதற்கும் கீழ் என்ற பிரிவிலேயே மதிப்பீடு செய்துள்ளது. 10 சதவீத
கல்லூரிகளே உயர்ந்த மதிப்பீடுகளை பெற்றுள்ளது. 64 சதவீத கல்லூரிகளுக்கு
அரசின் உதவி கிடைப்பதில்லை.
மத்திய அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 10
ஆண்டுகளில் 16 மடங்கு உயர்ந்துள்ளது; எதிர்காலத்திலும் நிதி ஒதுக்கீடு
உயரும் வாய்ப்பு உள்ளது. ஆரம்ப கல்வி முதல் பள்ளிக்கல்வி முடிப்பது வரை
உள்ள மாணவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பட்டப்படிப்புக்குச்
செல்கின்றனர்; 17 சதவீதம் பேர் மட்டுமே உயர் கல்விக்குச் செல்கின்றனர்.
கல்வி நிலையங்கள் மாணவர்களின் திறமையை வளர்க்க தொழில் நிறுவனங்களுடன்
இணைந்து செயல்பட வேண்டும்.
ஐந்து நாட்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்,
ஒரு நாள் தொழிற்சாலையில் பணியாற்ற வேண்டும். படிப்புக்கும் பயிற்சிக்கும்
இடையே உள்ள இடைவெளியை இது குறைக்கும். இத்தகைய பயிற்சி தரும் முன்மாதிரி
கல்லூரிகளை ஊக்கப்படுத்த வேண்டும்." இவ்வாறு, சந்தானம் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...