சிவில் சர்வீஸ் பணிகளில் உள்ள அதிகாரிகளின்
நியமனம், இடமாற்றல், ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை ஒழுங்குமுறைப்படுத்த
தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச
நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
மேலும், அதிகாரிகள் பதவியில் தொடர குறிப்பிட்ட
காலவரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் தீர்ப்பு
வெளியான நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும்
என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இது குறித்து, நீதிபதிகள் கே.எஸ்.
ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் அடங்கிய அமர்வு மத்திய, மாநில
அரசுகளுக்கு வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
நிர்வாக பணிகளை மேற்கொள்ளும்போது
எழுத்துப்பூர்வ உத்தரவைப் பெற்ற பிறகே அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
அரசியல் தலைமைகள் பிறப்பிக்கும் வாய்மொழி உத்தரவு அடிப்படையில் செயல்படக்
கூடாது. அது செல்லுபடியாகாது. அவசர காலங்களில் வாய்மொழி உத்தரவுக்குக்
கீழ்பணிந்து செயல்பட்டாலும் அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவை பெற வேண்டியது
துறை அதிகாரியின் கடமையாகும்.
பணிக்கால நிர்ணயம்: பணியில் உள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட பதவியில் எவ்வளவு காலம் இருக்கலாம் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும்.
மாநில தலைமைச் செயலர் மற்றும் மாநில தலைமை வன
பாதுகாப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகளின் பெயரை
முதல்வர் அல்லது மாநில அமைச்சரவைக்கு முதல்வரால் நியமிக்கப்படும் அமைச்சர்,
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், பதவியில் இருந்து ஓய்வு பெறும் அரசுத்
தலைமைச் செயலர் ஆகியோர் கலந்தாலோசித்து பரிந்துரை செய்ய வேண்டும். அப்பதவி
இரண்டு ஆண்டுகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
சிவில் சர்வீஸ் பணி சீர்திருத்தம் தொடர்பாக
ஆய்வு செய்ய 2004-இல் அமைக்கப்பட்ட ஹோடா குழு, சந்தானம் குழு ஆகியவை
பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளன.
சிவில் சர்வீஸ் பணி பொறுப்புணர்வு,
வெளிப்படைத்தன்மை, நியாயம் மிக்கதாக இருக்க வேண்டும். நிர்வாகத்தின்
உயர்நிலையில் இருப்பவர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்சார்ந்த மற்றும்
தனிப்பட்ட நலன்கள் போன்றவற்றால் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு எவ்வித
நெருக்குதலும் அளிக்கக் கூடாது; தேவைப்பட்டால் அகில இந்திய சிவில் சர்வீஸ்
விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்; மத்திய- மாநில அளவில் உள்ள சிவில்
சர்வீஸ் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும்.
முதல்வரின் அதிகாரம்: மாநில அளவில் பணியாற்றும்
அகில இந்திய சிவில் சர்வீஸ் மற்றும் மாநில "குரூப் ஏ' அதிகாரிகளை
இடமாற்றம் செய்யும் அதிகாரம் முதல்வருக்கு உண்டு.
மூன்று ஆண்டுகளுக்கு உள்பட்ட காலத்தில் ஒரு
அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டால், அது முதல்வரே பிறப்பித்த உத்தரவு
என்றாலும் அதை எதிர்த்து மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயத்தில் முறையிட
சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உரிமை உண்டு.
நிர்ணயிக்கப்பட்ட பணிக் காலத்துக்கு முன்பு
இடமாற்றல் செய்யப்படும் அதிகாரிகள் தொடர்பான விவரத்தை சட்டப்பேரவையில்
தாக்கல் செய்ய வேண்டும். பணிக்காலத்துக்கு முன்பு ஓர் அதிகாரியை இடமாற்றம்
செய்யும் இறுதி அதிகாரம் முதல்வருக்கே உண்டு.
அமைச்சரின் உரிமை: சம்பந்தப்பட்ட துறையில்
பணியாற்றும் "குரூப் ஏ' அல்லது "குரூப் பி' அதிகாரியை, அவரது பதவிக்
காலத்துக்கு முன்பே இடமாற்றம் செய்ய அத்துறையின் அமைச்சருக்கு நியாயமான
காரணம் இருந்தால், அவர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை முறைப்படி அணுகி அனுமதி
கோர வேண்டும். அதன் விசாரணை அறிக்கை, முதல்வரிடம் அளிக்கப்பட்ட பிறகு அவர்
இறுதி முடிவு எடுப்பார்.
மத்திய அரசுப் பணியில் உள்ள அதிகாரிகளின்
நியமனம், இடமாற்றம் போன்றவற்றை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட "மத்திய சிவில்
சர்வீஸ் ஆணையம்' அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில்
குறிப்பிட்டுள்ளனர்.
83 பேர் தொடர்ந்த வழக்கு: இது தொடர்பாக ஓய்வு
பெற்ற ஐஏஎஸ் உயரதிகாரிகளான மத்திய அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.
சுப்பிரமணியன், தலைமைத் தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை ஆணையர் என்.
கோபால்சாமி, தேர்தல் ஆணைய முன்னாள் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமமூர்த்தி, ஓய்வு
பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் வேத் பிரகாஷ் மார்வா, ஜோகிந்தர் சிங், டி.ஆர்.
கார்த்திகேயன் உள்பட 83 பேர் உச்ச நீதிமன்றத்தில் 2011-ஆம் ஆண்டில் மனு
தாக்கல் செய்திருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...