மத்திய சிறையில் திறந்தநிலைப் பல்கலைகள் மூலம்
டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு பயில்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும்
அதிகரித்து வருகிறது; படிப்பில் கவனம் செலுத்துவதால் கைதிகளின் மனஅழுத்தம்
குறைந்து, வாழ்வில் வெற்றி அடைய தூண்டுகோலாக அமைகிறது.
கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை என,
2,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை
கைதிகளில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு
தண்டனை பெற்றவர்களும் சந்தர்ப்ப சூழ்நிலை, உணர்ச்சிவசப்பட்டு
குற்றவாளிகளாக மாறியவர்களும் அடங்குவர். இதுபோன்ற தண்டனை கைதிகள், அவர்கள்
செய்த குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழ எண்ணுகின்றனர்.
கைதிகளின் நல்வாழ்வுக்காக கோவை மத்திய சிறையில்
மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மூலம் தமிழ்நாடு திறந்த நிலை, சென்னை
பல்கலை, பாரதியார், இந்திராகாந்தி பல்கலை, அரசு மகளிர் பாலிடெக்னிக்
மற்றும் சில தனியார் கல்லூரிகள் வாயிலாக பட்டய மற்றும் பட்டப் படிப்புகள்
வழங்கப்படுகின்றன. ஹார்டு வேர், டி.டி.பி., மனித உரிமை உள்ளிட்ட
பட்டயபடிப்புகளும், எம்.ஏ., அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், வரலாறு,
குற்றவியல், பொருளாதாரம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.லிட்., தமிழ்,
பி.பி.ஏ., பி.எஸ்.டபிள்யூ., உள்ளிட்ட பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், புக் பைண்டிங், விசைத்தறி,
கம்ப்யூட்டர், தையல், கைத்தறி, மின் இணைப்பு, கைவினைப் பொருட்கள்
தயாரித்தல் போன்ற தொழில் கல்வி படிப்புகளும் வழங்கப்படுகின்றன. சிறையில்
கடந்த சில ஆண்டுகளாக பட்டப் படிப்பு படிக்கும் ஆண் மற்றும் பெண் கைதிகளின்
எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
உதாரணமாக, 2011-12ம் ஆண்டு 15 கைதிகள் பட்டயப்
படிப்பும், 29 கைதிகள் பட்டப்படிப்பும், 35 கைதிகள் தொழில் கல்வி படிப்பும்
முடித்துள்ளனர். 2012 -13ம் ஆண்டு 38 கைதிகள் பட்டயப்படிப்பும், 18
கைதிகள் பட்டப்படிப்பும், 50 பேர் தொழில் கல்வி படிப்பும் படித்துள்ளனர்.
நடப்புக் கல்வியாண்டில்(2013 -14), 64 கைதிகள் பட்டய படிப்பும், 36 கைதிகள்
பட்டப் படிப்பும், 215 கைதிகள் தொழில் கல்வி படிப்பும் படித்துள்ளனர்.
பட்டய மற்றும் பட்டப் படிப்புகளில் ஆண் கைதிகள் அதிகளவிலும், தொழில்
கல்வியில் பெண் கைதிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, கோவை மத்திய சிறையில் அடிப்படை
எழுத்தறிவு திட்டம், 100க்கு 100 பாடத்திட்டம், "கற்கும் பாரதம்" போன்ற
திட்டங்கள் மூலம் அடிப்படை எழுத்துக் கல்வி கற்றுத் தரப்படுகிறது. மேலும்,
ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத்தேர்வுகளிலும் கைதிகள் பங்கேற்று, வெற்றி பெற்று வருகின்றனர்.
கைதிகளுக்கு கல்வி கற்பிக்கப்படுவதன் மூலம்
அவர்களின் மனதில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைத்து, நல்வழிப்படுத்த
தூண்டுகோலாக உள்ளது. கோவை மத்திய சிறை குறித்து, 2009ம் ஆண்டு தேசிய
எழுத்தறிவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், "கோவை மத்திய சிறைச்சாலை
பார்ப்பதற்கு சிறைச்சாலை போன்று தோற்றம் அளிக்கவில்லை; ஒரு கல்வி நிறுவனம்
போன்று தோற்றமளிக்கிறது" என்று பாராட்டியுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில் கைதிகள் எழுதிய பொதுத்
தேர்வில் பத்தாம் வகுப்பில் அதிகபட்சமாக 373 மதிப்பெண்களும், பிளஸ் 2
தேர்வில் 1097 மதிப்பெண்களும் பெறப்பட்டுள்ளன. அடுத்தாண்டு நடக்கும்
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 17 பேர், பத்தாம் வகுப்பு தேர்வில் 19
பேர் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஐந்து பேர் தேர்வு எழுத தயாராகி
வருகின்றனர்.
கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., கோவிந்தராஜ்
கூறுகையில், "கைதிகளுக்கு படிப்பு மட்டுமின்றி மொழி வளர்ப்பு திறமை,
கோபத்தை கட்டுப்படுத்தல், நேர்மறையான சிந்தனை வளர்த்து கொள்ளுதல்,
மனிதநேயம் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அனைத்து கைதிகளுக்கும்
அடிப்படை கல்வியறிவு அவசியம் என்ற நோக்கத்தில் இதுபோன்ற பயற்சிகள்
வழங்கப்படுகின்றன" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...