அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து
வருவதைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில்
தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதாக பள்ளி கல்வித்துறைக்குப் புகார்கள்
வந்தது. தமிழ், ஆங்கில மொழியைச் சரியாக உச்சரிக்க தெரியாமலும், எழுதவும்,
படிக்கவும் தெரியவில்லை.
இதேப் போன்று கணக்கு பாடத்தில் அடிப்படை
வழிமுறைகள் கூட தெரியவில்லை என்பதே இதற்கு காரணம் என, கல்வித்துறை
அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநிலம்
முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இம்மூன்று பாடங்களிலும்
மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சென்னையில்
ஆசிரியர்களுக்கு மாநில அளவில் நாளை (6ம் தேதி) பணியிடைப் பயிற்சி அளிக்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்
வகையில் பாடங்களை நடத்தும் விதம் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும்
துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள்
1,695 இயங்கி வருகின்றன. இதில் 40 சதவீதம் அளவில் மாணவ, மாணவிகள் தமிழ்,
ஆங்கிலம், கணக்கு பாடங்களில் தேர்ச்சி சதவீதம் குறைந்திருப்பது அதிகாரிகள்
எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்தது.
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சென்னையில்
அளிக்கப்படும் பயிற்சியில் கடலூர் மாவட்டம் சார்பில் வட்டார வளமைய ஆசிரியர்
பயிற்றுனர் இருவரும் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்
ஒருவரும் பங்கேற்க உள்ளனர். பயிற்சி முடிந்து அவர்கள், கடலூர் மாவட்டத்தில்
உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 2,719
பேருக்கு இம்மாதம் முதல் படிப்படியாக பயிற்சி அளிக்க உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...