"பொதுத்தேர்வு மாணவருக்கு, மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் நேரத்தில்,
அலகுத்தேர்வு நடத்துவதை மாற்றியமைத்து, முதல் வகுப்பு தொடங்கும் காலை
நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும்" என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் தேர்வுத்துறை சார்பில், மேல்நிலைக்கல்வி பொதுத் தேர்வு,
இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு, தொடக்கக் கல்வி
பட்டயத் தேர்வு உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. தேர்வர்களின் ஆள்மாறாட்டத்தை
தடுக்க, தேர்வுக்கு முன்பாக, தேர்வர்களின் பெயர் பட்டியல், தேர்வு மைய
அனுமதிச் சான்று, வருகைச் சான்று, பெயர், பிறந்த தேதி, பாலினம், ஜாதி,
முகவரி, மதம், மாற்றுத்திறனாளி விவரம், பெற்றோர் பெயர், மொபைல் எண்,
படிப்பு குரூப், பாடம், உறுதிமொழி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டது.
இதற்கிடையே, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் பொருட்டு அலகு
தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்ட
இரண்டு பாடங்களுக்கு வினாக்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும்.
பிரிண்ட் செய்யப்பட்ட வினாத்தாள் அனைத்தும் மாவட்ட கல்வி அலுவலகத்தில்
இருந்து, பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்படும்.
ஒன்றரை மணி நேர அலகுத்தேர்வில், ஸ்பெஷல் கிளாஸ் எனப்படும் மாலை 4 மணி
முதல் 5.30 மணி வரையிலான நேரத்தில் நடத்தப்படுகிறது. ப்ளஸ் 2 மற்றும்
எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவருக்கு மட்டுமே, இந்த தேர்வு நடத்தப்படுவதால், மற்ற
மாணவர்கள் வழக்கம் போல் மாலை 4.30 மணிக்கு வீட்டுக்குச் சென்று
விடுகின்றனர்.
"ஸ்பெஷல் கிளாஸ்" நேரத்தில் தேர்வுகள் வைக்கப்படுவதால் முழுமையாக
தேர்வில் கவனம் செலுத்தி, தேர்வு எழுத முடிவதில்லை என மாணவர்கள்
கூறுகின்றனர். மேலும், மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் தேர்வை கட்டாயம்
நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால் ஒப்புக்காக தேர்வு நடத்த
வேண்டியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 158 அரசு, அரசு உதவிபெறும்,
ஆதிதிராவிடர், உண்டு உறவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், முதல்
அலகு தேர்வு முடிவுற்று இரண்டாம் கட்ட அலகுத்தேர்வு நடந்து
கொண்டிருக்கிறது.
ஆறு கட்டமாக நடக்கும் அலகுத் தேர்வு நேரத்தில் மாற்றம் கொண்டு
வரவேண்டும் என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதன்படி, முன்கூட்டியே
அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டாலும், "ஸ்பெஷல் கிளாஸ்"
நேரத்தில் தேர்வு நடத்தப்படுவதால், அலகுத்தேர்வுக்கு படித்த பாடங்களை அவசர
அவசரமாக புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.
காலையில் இருந்து வெவ்வேறு பாடங்களை படித்துவிட்டு, மாலையில்
அலகுத்தேர்வு நடத்துவதால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை
உள்ளது. எனவே, "காலையில் முதல் வகுப்பு துவங்கும் நேரத்தில்,
அலகுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, மாலையில் வழக்கம்போல், "ஸ்பெஷல் கிளாஸ்"
எடுக்கலாம்" என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
"தேர்வுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின், மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்படும்" என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...