அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகளில், மாணவர்களிடம் இருந்து பெறப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல்
பீஸ்) ரத்து செய்த ஈரோடு மாவட்டத்துக்கு, 52 லட்சம் ரூபாயை அரசு வழங்கி
உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும்
நிதியுதவி பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவ,
மாணவிகளிடம் மிக குறைந்த கட்டணம் சிறப்பு கட்டணமாக பெறப்பட்டு வந்தது. இந்த
கட்டணத்தில் இருந்து பள்ளிகளுக்கு தேவையான சிறுசிறு வசதிகளை மேம்படுத்திக்
கொள்ள பள்ளிகளிலேயே அந்தந்த தலைமையாசிரியர் இந்நிதியை கையாள அரசு அனுமதி
வழங்கி இருந்தது.
அரசு பள்ளிகள் மாநகராட்சி மற்றும் அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் ப்ளஸ் 2 வரை சேர்க்கப்படும்
மாணவர்கள் மற்றும் பள்ளியில் தொடர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளிடம்
பெறப்பட்டு வரும் சிறப்பு கட்டணம் 2008-09 ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டன.
அரசே முழு கட்டணத்தையும் மாணவர்களுக்காக
ஏற்றுக் கொண்டு, பள்ளிகளுக்கு ஏற்படும் நிதியிழப்பை ஈடு செய்ய, சிறப்பு
கட்டணத்தை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு அரசு வழங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும், 2011-12ம் ஆண்டு அரசு
மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும், 21 கோடி
ரூபாயும், மாநகராட்சி பள்ளிகளுக்கு 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இதேபோல், 2012-13ம் ஆண்டுக்கு 20.50 கோடி
ரூபாயும், 2013-14ம் ஆண்டுக்கு, 20.50 கோடி ரூபாயும் அரசு ஒதுக்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை,
மேல்நிலை மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, இந்தாண்டுக்கான
சிறப்பு கட்டணம் வழங்குவதற்கான ஆணை தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு
மாவட்டத்தில் 192 அரசு, மாநகராட்சி மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு
2012-13ம் ஆண்டுக்கு 54 லட்சம் ரூபாயும், 2013-14ம் ஆண்டுக்கு 52 லட்சம்
ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது
வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம், ஐந்து
லட்சத்துக்கும் மேலான மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து
விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அரசு பள்ளியில் படிக்கும்
மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், சைக்கிள்,
ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப், ஒன்று முதல், ப்ளஸ் 1 வரை புத்தகப்
பை, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டி, ஒன்று முதல், 8ம்
வகுப்பு வரை படிக்கும், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு,
இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படுகிறது.
தவிர, முதல் வகுப்பிலிருந்து, ப்ளஸ் 2 வரை
படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ், கலர் கிரையான்ஸ், கலர்
பென்சில்கள் போன்ற, 16 வகையான இலவசப்பொருள்கள் அரசு வழங்கும் நிலையில்,
மாணவர்கள் செலுத்தி வந்த சிறப்பு கட்டணத்தையும் அரசு ரத்து செய்துள்ளது.
அதனால் ஏற்படும் நிதியிழப்பை பள்ளிகளுக்கு வழங்கி அடிப்படை வசதிகள்
தடையின்றி வடக்க வழி செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு, பள்ளிகளுக்கு
வழங்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகளுக்கு குடிநீர், கழிப்பிட வசதி போன்ற
அடிப்படை வசதிகளை தொய்வின்றி மேற்கொள்ள முடியும், என, அரசு பள்ளி தலைமை
ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...