டி.ஆர்.பி.,யில், ஒவ்வொரு தேர்வு முடிவும், பெரும் இழுவைக்குப் பிறகே
வெளியாகிறது. ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை
மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல் இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு
முடிவும் வெளியாகவில்லை.
தேர்வு முடிவு
வெளியீட்டிற்குப்பின், சான்றிதழ் சரிபார்ப்பு, இறுதி பட்டியல் தயாரிப்பு
என, பல வேலைகள் உள்ளன. இவை அனைத்தையும் முடித்து, இறுதியாக, தேர்வு
செய்யப்பட்டவர்களின் பட்டியலை, கல்வித்துறையிடம் ஒப்படைப்பதற்குள், பள்ளி
பொதுத்தேர்வே வந்துவிடும் நிலை உள்ளது. பட்டதாரி ஆசிரியர் இல்லாததால், 10ம்
வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களும், முதுகலை ஆசிரியர் இல்லாததால்,
பிளஸ் 2 தேர்வை எழுதும் மாணவர்களும், கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாவர்.
இதை அறிந்த முதல்வர், தற்காலிக அடிப்படையில், 2,645 முதுகலை
ஆசிரியர்களையும், 3,900 பட்டதாரி ஆசிரியர்களையும், உடனடியாக நியமனம் செய்ய,
நேற்று முன்தினம் உத்தரவிட்டார். முதல்வர் உத்தரவிட்டிருப்பது குறித்த
செய்தியை, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அறிக்கையாக
வெளியிட்டார்.
இந்த அறிக்கை, இரவு, 7:30 மணிக்கு வெளியானது. அடுத்த ஒன்றரை மணி
நேரத்தில், அதாவது, 9:00 மணிக்கு, திடீரென முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை,
டி.ஆர்.பி., வெளியிட்டது. கல்வித்துறை இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில்,
"மாணவர்களின் நலன் கருதி, தொகுப்பூதிய அடிப்படையில், 6,545 ஆசிரியர்களை,
தற்காலிகமாக நிரப்ப, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இதற்காக, 20.18 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என தெரிவித்து
இருந்தார்.
டி.ஆர்.பி.,யின் செயல்பாடு களில், தேக்க நிலை ஏற்பட்டு உள்ளது என்ற
கருத்தை, கல்வித்துறை இயக்குனர் அறிக்கை வெளிப்படுத்துவதால், அதை மறுக்கும்
வகையில், உடனடியாக, தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டதாக
கூறப்படுகிறது. இந்த வாரத்திற்குள், தமிழ் அல்லாத இதர பாடங்களுக்கு தேர்வு
செய்யப்படுவோரின் இறுதி பட்டியலை வெளியிடவும், டி.ஆர்.பி., முடிவு
செய்துள்ளது. அதேபோல், டி.இ.டி., தேர்வு முடிவுகளும், விரைவில் வெளியாகும்
என, கூறப்படுகிறது. இதனால், 6,545 தற்காலிக ஆசிரியர் நியமனம்,
கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: தற்காலிக ஆசிரியர்
நியமனம் குறித்த அறிவிப்பு, எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு, எவ்வித
தகவலும் தெரிவிப்பது இல்லை.
ஒரே அமைச்சகத்தின் கீழ் இயங்கினாலும், தகவல் தொடர்பு சரியாக இல்லை.
தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பிற்கும், முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை
வெளியிட்டதற்கும், சம்பந்தம் இல்லை. இந்த மாதத்திற்குள், இறுதி பட்டியலை
தயாரித்து, கல்வித்துறையிடம் அளித்துவிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி.,
வட்டாரங்கள் தெரிவித்தன. கல்வித்துறை - டி.ஆர்.பி., இடையே ஏற்பட்டுள்ள இந்த
பனிப்போர், எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.
what is this ? this add.is collabrate lot of teacher
ReplyDelete