பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர்கள் போராட்டம், குழப்பங்களைத் தடுக்க
அதிரடியாக பறக்கும் படை அமைக்கப்பட்டு ரோந்துப் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து டி.ஆர். ஓ.,க்கள், கணக்கு அதிகாரி, தாசில்தார் என அரசு
அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் சஸ்பெண்ட்
செய்யப்பட்டார். பதிவாளர் மீனாட்சி சுந்தரம் இடமாறுதல் செய்து பொறுப்பு
பதிவாளராக பஞ்சநாதம் நியமிக்கப்பட்டார். கடந்த 26ம் தேதி அண்ணாமலை பல்கலைக்
கழகம், அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு சட்ட முன்வடிவு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
பல்கலைக் கழகம் அரசின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதால்,
ஆசிரியர்கள், ஊழியர்களை அரசு விதிகள்படி மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது.
இதுவரை பல்கலைக்கழகம் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் தற்போது
பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக மாணவர்களைத்
தூண்டிவிட்டு போராட்டம், வகுப்பு புறக்கணிப்பு போன்றவற்றில் ஈடுபட
வைக்கின்றனர்.
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஏதாவது காரணங்களைக் கூறி திடீரென வகுப்புப்
புறக்கணிப்பு செய்து, போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களின் குறைகளைக்
கேட்டு சரி செய்தால் அடுத்த துறை மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
கல்வி நிலையம் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி
வருகின்றனர். இதனால் நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனைச் சரிசெய்ய பல்கலைக் கழகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பல்கலைக் கழகத்தில் ஏற்படும் பிரச்னைகள், போராட்டங்கள், வகுப்புப்
புறக்கணிப்பு போன்றவற்றைத் தடுக்க சிறப்புப் பறக்கும் படை
அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும்படை டி.ஆர்.ஓ., மாலினி தலைமையில்
ஆசிரியர்கள், ஊழியர்கள் கொண்ட 10 பேர் கொண்ட குழுவாகும். இப்படை பல்கலைக்
கழக வளாகத்தில் சுற்றி வருகிறது.
இதற்கு தனி வேன் வழங்கப்பட்டு பறக்கும்படை குழுவினர் காலை 10 மணி முதல்
இரவு 7 மணி வரை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைக்கும் சென்று வர
வேண்டும். ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடன் அங்கு சென்று, தலைமை
அதிகாரிக்குத் தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி பிரச்னையை முடிக்க
வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் உள்ள 48 துறை தலைவர்களுக்கும் பறக்கும் படைத்
தலைவரின் செல்போன் எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் துறைகளில்
பிரச்னை ஏற்பட்டால் உடன் பறக்கும்படைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்
எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பறக்கும் படை வேன் எந்த சலனமும் இல்லாமல் பல்கலைக்கழக வளாகத்தை வலம்
வந்தவாறு உள்ளது. இதன் மூலம் பல்கலைக் கழகத்தில் சம்பந்தம் இல்லாமல்
ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...