பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்
பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த தாற்காலிக ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்று
மாவட்டக் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பணியிடங்களை நிரப்ப
அனுமதி வழங்கப்பட்டாலும் பாதிக்கும் மேல் இந்த இடங்கள் நிரம்புவதில்லை.
கிராமங்கள், பின்தங்கிய பகுதிகளில் தான் ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலும்
காலியாக உள்ளன. இந்தப் பகுதிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களும் போதிய எண்ணிக்கையில் கிடைப்பதில்லை என
தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். ஆங்கிலம் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு
ஆசிரியர்களே கிடைப்பதில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்களை தாற்காலிகமாக நியமிக்க பொதுவாக அனுமதி வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள
2,645 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3,900 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களே தாற்காலிகமாக
நியமித்துக்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை திங்கள்கிழமை அறிவித்தது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
தொகுப்பூதியமாக ரூ. 5 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக
ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஓரிரு
பாடங்களைத் தவிர பெரும்பாலும் தேவைக்கும் அதிகமாகவே ஆசிரியர்கள் உள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் கிராமப்பகுதிகளில்,
மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில்தான் இருக்கின்றன.
தொகுப்பூதியம் குறைவு என்பதால் நீண்ட தூரம் பயணித்து இந்தப் பணியை
மேற்கொள்ள முடியாது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆசிரியர்கள் எந்த நேரத்திலும் பணி நீக்கம்
செய்யப்படலாம். எனவே, தனியார் பள்ளியில் பணியாற்றுபவர்களோ,
நகர்ப்புறங்களில் உள்ளவர்களோ இதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை என்றும்
அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதில்
அரசியல்வாதிகளின் பரிந்துரைகளுக்கோ, வேறு குறுக்கீடுகளுக்கோ இடமில்லை.
விருப்பமுள்ளவர்கள் நேராக தலைமையாசிரியர்களிடம் சென்று விண்ணப்பம்
செய்யலாம். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒப்புதல் பெற்று இவர்கள் பணிபுரிய
அனுமதி வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
இவர்களுக்கான சம்பளம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வழங்கப்படும்.
மாவட்ட அளவில் தெரிவித்திருந்த காலிப்
பணியிடங்களில் 40 முதல் 50 சதவீத அளவுக்கே தாற்காலிகமாக நிரப்ப அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம்
ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களையே
தாற்காலிகமாக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...