Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

யோகா - உடற்பயிற்சி - விளையாட்டு





        இவை மூன்றுக்கும் நமது வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் உண்டு. இவை மூன்றுமே நல்ல ஆரோக்கயமான வாழ்வுக்கு அவசியமானவை.

             இவற்றில் மனித நாகரிகம் தோன்றாத காலத்திலிருந்தே விளையாட்டு இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இப்போதும் ஆடு மாடு நாய் இன்னும் மனிதரோடு தொடர்புடைய மற்றும் தொடர்பில்லாத மற்ற பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தங்கள் இனத்துடன் தங்கள் பாணியில் விளையாடுவதைக் காண்கிறோம்.

               மற்ற உயிரினங்கள் முறையில்லாத, விதிகள் இல்லாத, காலவரையரை இல்லாத வகையில் தங்கள் விளையாட்டுணர்வை வெளிப்படுத்துகின்றன. ஆனால் மனிதராகிய நாம் நாகரிகத்தில் மேம்பட்டவர்களாக இருப்பதால் பரிணாம வளர்ச்சியின் காரணமாக பிற உயிரினங்களில் இருந்து பலவகையிலும் வேறுபட்டவர்களாக இருப்பதால் ஒழுங்கற்ற விளையாட்டுக்களோடு சேர்த்து முறையான ஒழுங்கமைந்த விளையாட்டுக்களையும் விளையாடுகிறோம். ஆனால் விளையாட்டு உணர்வு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதே!

         யோகக் கலை உடற்பயிற்சி ஆகிய இரண்டுக்கும் விளையாட்டுக்கும் இடையே வேறுபாடு உண்டு. விளையாட்டுக்கு சிறியதோ பெரியதோ ஏதாவது ஒரு அளவில் விளையாட்டுத் திடல்கள் அல்லது விளையாட்டுக் கூடங்களாவது இருக்கவேண்டும். விளையாட்டுக்களில் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பது தவிர மற்றபடி நமது அங்க அசைவுகள் சுதந்திரமானவை. ஆனால் மற்ற இரண்டிலும் எவ்வளவு வேகமாக அல்லது சிறப்பாகச் செய்தாலும் உடலசைவுகள் ஒரேமாதிரி ஒழுங்கமைவில்தான் செயல்படவேண்டும்.

          சிறுவர் முதல் முதியவர்வரை யார்வேண்டுமானாலும் விருப்பமும் ஆர்வமும் உடல் தகுதியும் உள்ளவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.

           விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்போ மைதான வசதியோ அல்லது வயதுக்குப் பொருத்தமான துணையோ கிடைக்காத நிலையில் உள்ளவர்கள் விளையாட்டுகளுக்குப் பதிலாக உடற்பயிற்சியில் ஈடுபடலாம். விளையாட்டுக்களில் என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அவ்வளவு நன்மையும உடற்பயிற்சியிலும் கிடைக்கும்

            விளையாட்டுக்களில்கூட ஏற்ற இறக்கமான எளிய அல்லது கடினமான அசைவுகளைச் செய்கிறோம். ஆனால் உடற்பயிற்சியில் ஒரே சீராக எப்படியெல்லாம் உடலுக்குப் பயிற்சி கொடுக்க விரும்புகிறோமா அப்படியெல்லாம் கொடுக்கலாம். விளையாட்டுக்களில் ஒரு விளையாட்டில் எப்படியெல்லாம் உடலசைவுகள் தேவைப்படுமோ அப்படி மட்டுமே உடல் இயங்கும். சில அசைவுகளுக்கு வேலையே இல்லாமல் போகும்போது அந்த இயக்கம் கிடைக்காது.

         ஆனால் உடற்பயிற்சியில் உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை அனைத்து அவயங்களுக்கும் பயிற்சி கிடைப்பதால் விளையாட்டில் ஈடுபடாமலேயெ விளையாட்டால் கிடைக்கும் பயன்கள் அனைத்தையும பெறுகிறோம். கூடுதலாகவும் பெறுகிறோம். அதனால்தான் எத்தகைய விளையாட்டில் எந்த நிலை வீரராக இருந்தாலும் விளையாடும் முன்பாக உடற்பயிற்சியும் செய்கிறார்


         ஒன்றே ஒன்றுதான் உடற்பயிற்சியின்போது விளையாட்டில் உள்ளதுபோல் இருக்காது. ஆதாவது மற்றவர்களோடு பேசுவதோ கருத்துப் பரிமாறிக் கொள்வதோ இருக்காது. விளையாட்டில் கிடைக்கும் குதூகலம் மற்ற இரண்டிலும் கிடைக்காது. மனதை ஒரு நிலையில் குவிக்கும் மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சிக்கு அதுவும் ஒரு வகையில் நல்லதே!

           யோகக் கலை என்பது விளையாட்டு உடற்பயிற்சி இரண்டின் பயன்களையும் எளிய முறையில் பெறுவதே!

          யோகக் கலைக்கும் மற்ற இரண்டுக்கும் உள்ள முதல் வேறுபாடு யோகக்கலையில் கடினமான வேகமான உடல் அசைவுகளால் களைப்படைவதோ வியர்த்துக் கொட்டுவதோ இருக்காது. ஆனால் மற்ற இரண்டிலும் கடினமான அசைவுகளாலும் வேகத்தாலும் வியர்த்துக் கொட்டும். அப்போதுதான்  பயன் கிடைக்கும் 

        ஆனால் யோகக் கலையில் அவ்வாறு இல்லாமல் ஆனால் அதைப்போலவே அல்லது அதைவிடச் சிறப்பான பயனைப் பெறமுடியும் அதுதான் யோகக் கலையின் சிறப்பு.

        மற்ற இரண்டிலும் நல்ல உடல் தகுதியுள்ளவர்கள்தான் சிறப்பாகவும் பயனள்ளதாகவும் செயல்பட முடியும் ஆனால் யோகக்கலையில் நோயாளிகள்கூட ஈடுபட்டு உடலை வருத்திக்கொள்ளாமல் பயன்பெற முடியும்.

இது எப்படிச் சாத்தியமாகிறது?

          ஆதாவது யோகம் என்றாலே சரியானது என்று பொருள்கொள்ளவேண்டும். யோகக் கலை என்றால் உடலையும் உள்ளத்தையும் சரியாக நிலைநிறுத்துவது என்பது பொருள்.

         மனிதராகிய நாம் உலகவாழ்வில் பலவகையான இயக்கங்களை வெளிப்படுத்தாமல் கற்சிலைபோல் வாழமுடியாது. அப்படி இயங்கும்போது நமது உடல் உறுப்புகள் எல்லாவிதமான அசைவுகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் அப்போதுதான் நமது இயக்கம் எளிமையாகவும் உடல் துன்பம் இல்லாமலும் இருக்கும்.

             ஆனால் நடைமுறைவாழ்வில் பல்வேறு சூழல்களில் வாழ்கிறோம். அப்போது எல்லோருக்குமே உடலால் வேலை செய்து அல்லது அதிகப்படியான இயக்கங்களை வெளிப்படுத்தித்தான் வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் உடலுக்குக் கொடுக்கும் வேலைகள் அதன் தேவையைப்பொறுத்தே அமைகிறது

             அதனால் அதிகத் தேவை இல்லாதவர்கள் போதுமான வேலையை உடல் உறுப்புக்களுக்குக் கொடுக்காமல் விடும்போது அவை வலுவற்றதாகவும் மென்மையானதாகவும் எளிதில் இயங்கச் சிரமப்படுகின்ற அளவு உடல் வளர்ச்சி தாறுமாறாகவும் ஆகிவிடுகிறது.

         அதனால் பலவீனமடையும் உடலுறுப்புக்கள் இயல்பான வாழ்க்கை அசைவுகளையே பெருந் துன்பமாகக் கருதும் நிலை ஏற்படுகிறது.

          இதைத் தவிர்க்கத்தான் உடற்பயிற்சிகளிலும் விளையாட்டுக்களிலும் யோகக் கலையில் ஈடுபடுவதன் மூலமும் உடல் உறுப்புக்களை வலுவேற்றவும் தேவையான அளவு இயங்கக்கூடியதாகவும்   செய்கிறோம்.

           அதில் யோகக் கலையில் விளையாட்டுக்ளின் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் எப்படி எப்படியெல்லாம் உடலைத் தகுதி பெறச்செய்கிறோமோ  அதைச் சிரமப்டாமல் வியர்க்காமல் செய்து முடிக்கிறோம்

        ஆதாவது மற்ற இரண்டின் மூலம் உடலுறுப்புகள் எந்த மாதிரி யெல்லாம் நிலைப்படுத்தி அதன் மூலம் நல்ல இயங்கு நிலைக்குக் கொண்டுவர முடியுமோ அத்தகைய ஒரு நிலைக்கு நேரடியாகவே கொண்டு செல்வதன் மூலம் அந்த நன்மைகளை எளிய முறையில் அடைவது என்பதே அது

           அதற்காக எளிய முறையில் மெல்ல மெல்ல உடலுறுப்புக்களை சிரமத்துக்குள்ளாக்காமல் பயிற்றுவிப்பதே அது.

அந்தப் பயிற்சியின் மூலம் வயதுக்குத் தக்கபடி எந்த அளவு தேவையோ அந்த அளவு உடலைப் பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.

         பலப்பலவிதமான யோகாசன முறைகளால் பலவிதமாகவும் உடலை நிலைநிறுத்தவும் அதே நிலையில் கூடுதல் நேரம் நீடிக்கவும் பயிலும்போது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல பயிற்சியாக அமைகிறது

         அதன் மூலம் ஒரு துணியில் ஒட்டியிருக்கும்அழுக்கு அடித்துத் துவைத்துப் பிழியும்போது எப்படி வெளியேறுகிறதோ அந்த மாதிரி நமது உடலுக்குத் தேவையானதை நிலைநிறுத்தவும் தேவையற்றதை வெளியேற்றவும் யோகக் கலை எளிய முறையில் பயன்படுகிறது.

          அதற்காக வேண்டி யோகக்கலையைப் பயில்கிறேன் என்று சொல்லி அதில் வல்லுனர்களாக இருப்பவர்களைப் போலவோ சர்க்கஸ் கலைஞர்களைப் போலவோ உடலை அதீதமாக வளைக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியம் இல்லை. அத்தகைய சாகசங்களை எல்லாம் யோகாப்பியாசத்தின் மூலம் உடம்பை எப்படியெல்லாம் நமது தேவைக்கேற்ப வளைத்து பயன்படுத்த முடியும் என்பதை நிலைநிறுத்துவதற்கும் நிரூபிப்பதற்கும் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் எல்லோரும் அப்படிச் செய்யவேண்டியது இல்லை

           நாம் எப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் வாழ்கிறோம் எப்படிப்பட்ட முறையில் நமது உடல் இயங்கவேண்டியது அவசியம் என்று நினைக்கிறோமோ அந்த அளவு யோகக்கலையைப் பயன்படுத்தினால் போதும் அற்புதமாக வாழலாம்.

      ஆக இந்த மூன்றையும் சரியாகப்பயன் படுத்தினால் அததற்குண்டான பயன்களை நிச்சயம் பெற முடியும். மூன்றையும் தீண்டாதவர்களாக வாழ்வதைவிட வாழாவிருப்பதே மேல்!

           யோகக் கலையோ உடற்பயிற்சியோ விளையாட்டோ எதுவென்றாலும் அதற்கு இணக்கமான வகையில் நமது உணவுப்பழக்கம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இவற்றால் கிடைக்கும் பயன்களையெல்லாம் தவறான உணவுப்பழக்கங்களும் மற்ற தீயபழக்கங்களும் அடித்துக்கொண்டு போய்விடும் என்பதுதான் உண்மை!

THANKS TO : Krishnasamy Subash 
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
M.A(YOGA)
GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive